கர்நாடகாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை வெள்ளத்தில் தத்தளித்த 3 ஆயிரம் பேர் மீட்பு: துங்கா நதியில் இருவர் அடித்து செல்லப்பட்ட சோகம்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் கடலோரம் மற்றும் மலைநாடு பகுதியில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. துங்கா நதியில் மணல் அள்ளிக்கொண்டிருந்த இருவர் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள், மலைநாடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் கடலோர பகுதியில் உள்ள தென்கனரா, உடுப்பி, கார்வார் ஆகிய மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மூன்று மாவட்டங்களிலும் கனமழை காரணமாக எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. தண்ணீர் சூழ்ந்துள்ள கிராமங்களில் தத்தளித்து வரும் மக்களை பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் மீட்டு முகாம்களில் தங்க வைத்து வருகிறார்கள். வெள்ளத்தில் தத்தளித்த 3 ஆயிரம் பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹாவேரி மாவட்டம், ராணிபென்னூர் தாலுகா, கோணன தம்பகி கிராமத்தில் துங்கா நதியோரத்தில் மாட்டு வண்டியில் மணல் நிரப்பி கொண்டிருந்த இருவர், நீரில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களின் உடல்களை தேடும் பணியில் தீயணைப்பு மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். கலபுர்கி மாவட்டம், கமலாபுரா தாலுகா, ஸ்ரீசந்தா கிராமத்தை சேர்ந்த பீராஷெட்டி (28) என்ற இளைஞர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை போராடி மீட்டனர். குடகு மாவட்டத்திலும் மழை ஆர்ப்பாட்டம் அதிகமாக உள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கர்நாடகா-மகாராஷ்டிரா மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக பீமா நதியில் பெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. கத்தராகி என்ற இடத்தில் மேம்பாலத்தின் மீது வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால், வாகன போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. இதனால் அப்சல்புரா-ஜேவர்கி இடையிலான சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மழை காரணமாக கல்புர்கி மாவட்டத்தில் உள்ள அப்சல்புரா, ஜேவர்கி, சேடம், சிஞ்சோளி ஆகிய தாலுகாக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. சேடம் தாலுகாவில் உள்ள வாசவதத்தா சிமெண்ட் தொழிற்சாலை நீரில் மூழ்கியுள்ளது.

Related Stories:

>