தினம் தினம் உச்சம் தொடும் கொரோனாவால் பங்குச்சந்தைகள் திடீர் சரிவு: 4.23 லட்சம் கோடி அவுட்: முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி

மும்பை: இந்திய பங்குச்சந்தைகளில் நேற்று திடீர் சரிவு ஏற்பட்டது. இதனால், முதலீட்டாளர்கள் ஒரே நாளில் 4.23 லட்சம் கோடியை இழந்தனர்.

 கொரோனா பரவலில் இருந்து பங்குச்சந்தைகள் கடும் ஆட்டம் கண்டு வருகின்றன. தொழில்துறைகள் மொத்தமாக முடங்கியதால் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் தயங்கம் காட்டி வருகின்றனர். இருப்பினும், அப்போது ஏற்படும் ஏற்றங்களால் நம்பிக்கையுடன் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு திடீர் சரிவுகள் பல லட்சம் ரூபாய் நஷ்டத்தை தந்து விடுகின்றன.  இந்த வகையில் நேற்று இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவு, முதலீட்டாளர்களை பெரும் நஷ்டத்திலும் கலக்கத்திலும் ஆக்கி விட்டது.

நேற்று, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், வர்த்தக துவக்கத்தில் 38,812.69 புள்ளிகளாக இருந்தது. அதிகபட்சமாக 38,990.76 புள்ளிகளை தொட்டு, குறைந்த பட்சமாக 37,938.53 புள்ளிகளாக சரிந்தது. வர்த்தக முடிவில், கடந்த வார இறுதியுடன் ஒப்பிடுகையில் 811.68 புள்ளிகள் சரிந்து 38,034.14 புள்ளிகளாக இருந்தது. அதாவது ஒரே நாளில் 2.09 சதவீதம் சரிவை சந்தித்தது. அதிலும், கடைசி 2 மணி நேரத்தில், திடீரென லாப நோக்கத்துடன் பங்குகளை முதலீட்டாளர்கள் விற்க துவங்கியதால், வர்த்தக இடையில் சென்செக்ஸ் 907 புள்ளிகள் சரிந்தன. ரியல் எஸ்டேட், தொலைத்தொடர்பு துறை பங்குகள் அதிகபட்சமாக 6 சதவீதம் சரிந்தன. உலோகம் மற்றும் ஆட்டோமொபைல் பங்குகள் 5 சதவீதம் வரை சரிந்தன.

தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி 254.4  புள்ளிகள் சரிந்து 11,250.55 ஆனது. இதனால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் 4,23,139.78 கோடியும், வர்த்தக இடையில் அதிகபட்சமாக 4.58 லட்சம் கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 3 நாள் சரிவில் 5,31,053.56 கோடியை முதலீட்டாளர்கள் இழந்துள்ளனர்.  பங்குச்சந்தைகள் இந்த அளவுக்கு சரிந்ததற்கு, கொரோனா பரவல் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 2வது முறையாக ஊரடங்கு அறிவித்துள்ளார். இதுபோல் ஸ்பெயின் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில்  புதிதாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

 இதை தொடர்ந்து, ஐரோப்பிய பங்குச்சந்தையில் கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க பங்குச்சந்தைகளில் தொடர்ந்து 3வது வாரமாக சரிவு நீடிக்கிறது.  இதுபோல், இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவது மற்றும் இந்தியா - சீனா இடையிலான மோதல் போக்கு காரணமாக முதலீட்டாளர்கள் பதற்றம் அடைந்துள்ளனர். எனவே, லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தனர்.

செயற்கை ஏற்றம் தந்தது ஏமாற்றம்

சர்வதேச பங்குச்சந்தைகளில் கடும் சரிவுகள், மத்திய அரசின் சில கொள்கை முடிவுகளால் இந்திய பங்குச்சந்தைகள் காலையில் பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டாலும், மாலையில் பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளன. இதுபோன்ற செயற்கையான ஏற்றங்களால் முதலீட்டாளர்களுக்கு அதிக இழப்பு ஏற்படுகிறது. இதனால் அப்பாவி முதலீட்டாளர்கள் பல லட்சம் ரூபாயை இழக்கின்றனர்.

Related Stories:

>