கோவா லாட்ஜில் பதுங்கி இருந்த காஞ்சிபுரம் பிரபல ரவுடிகள் 20 பேர் சுற்றிவளைத்து கைது

காஞ்சிபுரம்: கோவா லாட்ஜில் பதுங்கி இருந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளிகள் 20 பேர் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் அடுத்த திருப்பருத்திக்குன்றத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி ஸ்ரீதர். இவர் மீது கொலை, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உட்பட பல்வேறு வழக்குகள் இருந்தன. மேலும் ரவுடிகளை கூட்டாளியாக வைத்து கொண்டு தொழிலதிபர்கள் உட்பட பலரை மிரட்டி பணம் பறித்து வந்தார். ரவுடி ஸ்ரீதரை கைது செய்ய காஞ்சிபுரம் போலீசார் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், கம்போடியா நாட்டில் பதுங்கி இருந்த ஸ்ரீதர், போலீசார் தன்னை கைது செய்வதற்காக நெருங்குவதை அறிந்ததும், தற்கொலை செய்து கொண்டதாக, போலீசார் கூறுகின்றனர்.

இதனால், ரவுடி ஸ்ரீதரின் ஆதரவாளர்கள் மத்தியில், அவரது இடத்தை பிடிப்பதில் போட்டி நிலவியது. இதில் ஸ்ரீதரின் கார் டிரைவர் தினேஷ், ஸ்ரீதரின் உறவினர் தணிகா, பொய்யாக்குளம் தியாகு ஆகியோர் தனித்தனி குழுக்களாக செயல்பட்டனர். இதையொட்டி அவர்களுக்குள் நடந்த கோஷ்டி மோதலில் 10க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த தினேஷ் தலைமறைவாகவே இருந்தார். அவரை, போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த ரவுடிகள் கோவா மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி எஸ்பி சண்முகப்பிரியா தலைமையிலான தனிப்படை போலீசார், கடந்த சில நாட்களுக்கு முன் கோவா சென்று, கண்காணித்தனர்.

அப்போது, அங்குள்ள தனியார் விடுதியில் பதுங்கி இருந்த பிரபல ரவுடிகள் தினேஷ், தியாகு, கார்த்திக், ராஜேஷ், மணிகண்டன், டேவிட், ராஜா, சதீஷ் ,விக்னேஷ், மணிமாறன், துளசிராம், கடலூர் ரவுடி சுரேந்திரன் உள்பட 20 பேரை, சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர், அவர்களை காஞ்சிபுரம் கொண்டு வந்து விசாரிக்க உள்ளனர்.தினேஷ், பொய்யாகுளம் தியாகு ஆகியோர் கடந்த வாரம் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் 10 லட்சம் மாமூல் கேட்டு மிரட்டினர். இதுதொடர்பாக போலீசார் விசாரித்தபோது, அவர்கள், கூட்டாளிகளுடன் கோவா சென்று தலைமறைவானது குறிப்பிடத்தக்கது.

சிக்கிய 7 வயது சிறுவன் இதுகுறித்து டிஐஜி சாமுண்டீஸ்வரி, செய்தியாளர்களிடம் கூறியதாவது.

ரவுடி தரின் முக்கிய கூட்டாளிகளான தினேஷ் மீது 5 கொலை உள்பட 30க்கு மேற்பட்ட வழக்குகளும், பொய்யாகுளம் தியாகு மீது 8 கொலை உள்பட 61 வழக்குகளும் உள்ளன. இவர்கள் பொதுமக்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள், ரியல் எஸ்டேட் செய்பவர்களை அச்சுறுத்தி வந்தனர். இதனால், இவர்கள் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் சிறையில் இருந்து வெளியில் வந்து தலைமறைவான அவர்கள், பொதுமக்களை அச்சுறுத்தி கட்டப்பஞ்சாயத்து மூலம் பணம் பறித்துவந்தனர். அவர்களை பிடிக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை எடுத்தனர்.

இதைதொடர்ந்து, கோவாவில் பதுங்கி இருந்த 20 பேரை சுற்றிவளைத்து கைது செய்தோம். அவர்களை கைது செய்யும்போது, தியாகுவின் 7 வயது மகனும் உடன் இருந்தான். அவனை, சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்புவதா அல்லது அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதா என ஆலோசிக்கப்படுகிறது என்றார்.

Related Stories:

>