இறுதிப் பருவத் தேர்வுடன் அரியர் தேர்வெழுத அனுமதி கோரி சட்ட மாணவர்கள் வழக்கு: பல்கலைக்கழகப் பதிவாளர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

சென்னை: தமிழகத்தில் சட்டக் கல்லூரிகளில் இறுதிப் பருவத் தேர்வுடன் சேர்த்து அரியர் தேர்வுகளையும் எழுத அனுமதி கோரிய வழக்கில், சட்டப் பல்கலைக்கழகப் பதிவாளர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை துவரிமானைச் சேர்ந்த முத்துகவிதா, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை சட்டக்கல்லூரியில் இறுதியாண்டு படிக்கிறேன். கொரோனா ஊரடங்கால் உரிய மாதத்தில் இறுதியாண்டு பருவத் தேர்வு நடைபெறவில்லை. இதனால் செப். 30-க்குள் இறுதிப் பருவத் தேர்வை நடத்தி முடிக்க சட்டப் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

இதனால் செப்.24 முதல் 29 ஆம் தேதி வரை இறுதி ஆண்டு மாணவர்களுக்கான பருவத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இறுதியாண்டு மாணவர்களின் அரியர் தேர்வு குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இறுதியாண்டு மாணவர்கள் முந்தைய பருவத் தேர்வுகளில் தேர்ச்சியடையாத பாடங்களுக்கான தேர்வையும் சேர்த்து எழுத அனுமதி வழங்க வேண்டும். அனைத்துத் தேர்வுகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே அதே ஆண்டில் தகுதித் தேர்வு எழுதவும் தமிழ்நாடு பார் கவுன்சிலில் பதிவு செய்யவும் முடியும்.

இருப்பினும் இறுதியாண்டு மாணவர்களின் அரியர் தேர்வு குறித்து எந்த அறிவிப்பும் வெளிவராததால் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். எனவே, சட்ட மாணவர்கள் இறுதிப் பருவத் தேர்வுடன், முந்தைய பருவத் தேர்வில் வெற்றிபெறாத பாடங்களுக்கான அரியர் தேர்வையும் சேர்த்து எழுத அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்லைக்கழகப் பதிவாளர், பல்கலைக்கழக மானியக்குழுச் செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப்.29-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Related Stories:

>