×

சேத்தியாத்தோப்பு அருகே சேதமடைந்த பரவனாறு பாலத்தை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை

சேத்தியாத்தோப்பு: சேததியாத்தோப்பு அருகே சேதமடைந்துள்ள பரவனாறு பாலத்தை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பரவனாறு பாலம் 70 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும். மிகவும் பழமையான பாலத்தின் வழியே தினந்தோறும் சேலம், சென்னை, கடலூர், புதுச்சேரி, கும்பகோணம், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை திருப்பதி, உள்ளிட்ட பெருநகரங்களுக்கு செல்லும் பேருந்துகள், கார்கள், என ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பாலத்தின் வாயிலாக நெய்வேலி என்எல்சியிலிருந்து வெளியேறும் உபரி நீரானது பெருமாள் ஏரிக்கு சென்றடைகின்றது.

பாலம் சமீபகாலமாக மிகவும் சேதமாகி வலுவிழந்து வருகின்றது. சில மாதங்களுக்கு முன்பு பாலத்தின் கீழ்புறம் இருந்த பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்தது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதன்பேரில் பக்கவாட்டு சுவர் சீரமைக்கப்பட்டது. தற்போது மேற்கு புறம் உள்ள பக்கவாட்டு சுவர் இடிந்து நெடுஞ்சாலைத்துறையினர் மணல்  மூட்டைகள் அடுக்கி வைத்து வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் ஆபத்தான பயணம் மேற்கொள்வதோடு அச்சத்தோடு சென்று  வருகின்றனர். எனவே வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்பாக விகேடி நகாய் திட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் பரவனாறு பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : bridge ,Chethiyathoppu ,public ,motorists , The damaged Paravanaru bridge near Chethiyathoppu should be rehabilitated on a wartime basis: demand from the public and motorists
× RELATED ஆத்தூர் அருகே தரமற்ற முறையில் கட்டப்பட்ட பாலம்