×

6 மாத ஊரடங்குக்கு பின்னர் 7 மாநிலங்களில் இன்று பள்ளிகள் திறப்பு; திறந்தவெளி திரையரங்குக்கும் அனுமதி

புதுடெல்லி: கிட்டத்தட்ட 6 மாத ஊரடங்குக்கு பின்னர் நாடு முழுவதும் 7 மாநிலங்களில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அதேபோல் திறந்தவெளி திரையரங்கு செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட நான்காம் கட்ட தளர்வுகளில், 9 முதல் 12ம் வகுப்பு வரை, விருப்பத்தின் பேரில் வரும் மாணவர்களுக்கு செப். 21ம் தேதி (இன்று) முதல் பள்ளிகள் இயங்கலாம் என அனுமதி அளித்தது. அதன்படி, கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு பின்னர் ஆந்திரா, அசாம், அரியானா, மேகாலயா, ஜம்மு காஷ்மீர், நாகலாந்து மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் இன்று வகுப்புகள் துவங்கின. முதற்கட்டமாக 15 நாள்களுக்கு வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்பிறகு, சூழலை கருத்தில் கொண்டு வகுப்புகளை தொடர்வது குறித்து முடிவு செய்யப்படும். மாணவர்கள் வருகை கட்டாயம் இல்லை என்றும் விரும்பும் மாணவர்கள் பெற்றோர்களின் ஒப்புதல் பெற்று வரலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வக வசதிகளைப் பயன்படுத்தலாம். உடல் வெப்பநிலை பரிசோதனை, முக்கவசம், கிருமிநாசினி, தனிமனித இடைவெளி, 50 சதவிகித மாணவர்களுடன் பள்ளிகள் இயங்குவது போன்றவை பின்பற்றப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இன்று முதல் மேலும் 3 விதமான தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. அதன்படி, 100 பேர் வரை பொது விழாக்களில் கலந்து கொள்ளலாம். 100 பேர் வரை திருமணங்கள் மற்றும் இறுதி சடங்குகளில் கலந்து கொள்ளலாம். திறந்தவெளி திரையரங்குகள் இன்று முதல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Schools ,states ,theater , ‘Bride’ Appalam, Corona, BJP Minister, Sanjay Rawat...
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...