×

பழங்குடியின மக்களுக்கு சோலார் மின் விளக்குகள்

ஆனைமலை: ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகத்தில் 17 வனக்கிராமங்கள் உள்ளன. இங்கு 400க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த சுமார் 2700க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள்  வசிக்கின்றனர். சமவெளிப்பகுதியில் வசித்து வந்த மக்களுக்கு மின்வசதி கிடைத்த போதும், பழங்குடி கிராமங்களில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி மக்கள் தவித்து வந்தனர். மின்வசதி இல்லாததால் ஆன்லைன் கல்வி பயில்வதிலும் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து, வனக்கிராமங்களுக்கு மின்வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, வனத்துறை மற்றும் மின்வாரியம் சார்பில் பழங்குடியின மக்கள் குடியிருப்புகளில் சோலார் மின் விளக்குகள் அமைக்கும் பணி நடந்தது. இதில், முதற்கட்டமாக பொள்ளாச்சி வனச்சரகத்தில் சர்க்கார்பதி, சின்னார்பதி, நாகரூத்து -1, நாகரூத்து -2 ஆகிய வனக்கிராமங்களில் 106  குடும்பங்களுக்கு சோலார் மின் விளக்குகள் அமைக்கும் பணி நேற்று நடைபெற்றது. இதேபோல், உலாந்தி வனச்சரகத்தில் கோழிகமுத்தி, எருமைப்பாறை, கூமாட்டி வனக்கிராமங்களில் 116 குடும்பங்கள், வால்பாறை வனச்சரகத்தில் வெள்ளிமுடி, கவர்கல், நெடுங்குன்றா, கீழ்பூனாட்சி ஆகிய வனக்கிராமங்களில் 118 குடும்பங்கள், மானாம்பள்ளி வனச்சரகத்தில் சின்கோனா, சங்கரன்குடி, உடும்பன்பாறை, பாலகினார், கல்லார்குடி, பரமன்கடவு ஆகிய வனக்கிராமங்களில் 139 குடும்பங்கள் என மொத்தம் 479 குடும்பங்களுக்கு சோலார் மின்வசதிக்கான கருவிகள் வழங்கப்பட உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Solar lights
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை