×

இந்தியா-சீன இன்று பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில், லடாக் வான் பகுதியில் ரபேல் விமானம் திடீர் ரோந்து; விமான படையில் இணைந்த 10 நாளில் அதிரடி

புதுடெல்லி : எல்லை பதற்றத்துக்கு மத்தியில் இன்று இந்திய-சீன கமாண்டர் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் சூழலில்  லடாக் வான்பகுதியில் விமான படையில் இணைந்த 10 நாளில் ரபேல் விமானம் அதிரடியாக ரோந்து செல்கிறது. லடாக் எல்லையில் இந்தியா - சீனா இடையே ஏற்பட்டுள்ள மோதலை தொடர்ந்து இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்து வருகின்றன. இதனால் அங்கு தொடர்ந்து போர் பதற்றம் நீடிக்கிறது. அதேநேரம் அங்கு அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் மாஸ்கோவில் இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எல்லையில் படைகளை திரும்ப பெறுவது மற்றும் அமைதி ஏற்படுத்துவது தொடர்பாக 5 அம்ச திட்டம் வகுக்கப்பட்டது.

இந்த திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக இருநாட்டு ராணுவ அதிகாரிகள் இன்று லடாக் எல்லையில் சந்தித்து பேசுகின்றனர். இருநாட்டு ராணுவ கமாண்டர் மட்டத்தில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தை சீன பகுதியில் உள்ள மோல்டோவில் தொடங்குகிறது. இதில் உறுதியான முடிவை எட்டுவதற்காக, முதல் முறையாக இந்திய வெளியுறவுத்துறை இணை செயலாளர் மட்டத்திலான அதிகாரி ஒருவரும் பங்கேற்கிறார். லடாக் மோதலுக்கு பின் இரு நாட்டு ராணுவ கமாண்டர் மட்டத்தில் 6வது சந்திப்பு இதுவாகும்.
இந்நிலையில், ஐந்து மாதங்களாக நடந்து வரும் பதற்றத்திற்கு மத்தியில், இந்திய விமானப்படையில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட புதிய ரபேல் போர் விமானங்கள் லடாக்கில் பறக்கத் தொடங்கியுள்ளன. நேற்று அம்பாலா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ரபேல் போர் விமானங்கள் லடாக்கிற்கு பறந்து சென்றன.

இன்று காலை ரபேல் போர் விமானங்கள் லடாக் மற்றும் லே வான்பகுதியில் பறந்தன. எல்லையில் நடந்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் இந்திய விமானப்படை தீவிர கண்காணிப்பில் உள்ளதால் சீனாவும் எல்லையில் தனது படையை குவித்து வருகிறது. இந்திய விமானப்படையின் மிக்-29, தேஜாஸ் போன்ற விமானங்கள் ஏற்கனவே சீன எல்லையில் பறந்தது குறிப்பிடத்தக்கது. சீனாவை எச்சரிப்பது போன்று ரபேல் போர் விமானங்கள் வான்பகுதியில் திடீரென ரோந்து வந்ததால், எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. விமானப்படையில் இணைந்த பத்து நாட்களுக்குள், ரபேல் போர் விமானங்கள் எல்லையில் உள்ள எதிரிகளை எச்சரிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த போர் விமானங்களைத் தவிர, அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் மற்றும் சினூக் ஹெலிகாப்டர்கள் பொருட்கள் மற்றும் பிற ராணுவ உதவிகளையும் கொண்டு செல்கின்றன. இன்றைய பேச்சுவார்த்தைக்கு மத்தியில், ரபேல் விமானங்கள் லடாக் வான்பகுதியில் ரோந்து சென்றதால் சீனாவுக்கான எச்சரிக்கையாகவும், எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Tags : China ,India ,talks ,airspace ,Rafael ,Ladakh ,Air Force , India-China, Negotiated Na, Ladakh Van, Rafael flight
× RELATED மீண்டும் சீண்டும் சீனா மோடியின் சீனா...