×

நாமக்கல் அருகே போலி ரசீது மூலம் ரூ.5.89 லட்சம் குடிநீர் கட்டணம் வசூலித்து பயங்கர மோசடி

நாமக்கல்: நாமக்கல் அருகே, கொமரிபாளையம் ஊராட்சியில் போலி ரசீது மூலம் ரூ.5.89 லட்சம் குடிநீர் கட்டணம் வசூல் செய்து மோசடி நடந்துள்ளது. இந்த பணத்தை ஊராட்சி செயலாளர் திருப்பி செலுத்தியுள்ளார். நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியத்தில் உள்ள கொமரிபாளையத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தனலட்சுமி. இவர், கொமரிபாளையம் ஊராட்சியில் உள்ள குடிநீர் இணைப்புகள் குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விபரங்களை கேட்டபோது, போலி ரசீது மூலம் ரூ.5.89 லட்சம் கட்டணம் வசூலித்து, ஊராட்சி செயலாளர் மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள், மோகனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 2 பேர்,  கடந்த 10 மற்றும் 11ம் தேதிகளில் ஊராட்சி மன்ற அலுவலகம் சென்று, ஊராட்சி கணக்குகளை ஆய்வு செய்தனர். அப்போது, அங்கிருந்த போலி குடிநீர் இணைப்பு ரசீது புத்தகத்தை கட்டு, கட்டாக பறிமுதல் செய்தனர். மேலும், ஊராட்சி ஆவண கணக்குக்கு கொண்டு வரப்படாத படிவங்களையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து, அலுவலர்கள் நடத்திய விசாரணையில், கொமரிபாளையம் ஊராட்சியின் முன்னாள் செயலாளர் கந்தசாமி,  கடந்த 3 ஆண்டுகளில்,  போலி ரசீது மூலம், பொதுமக்களிடம் இருந்து ரூ.5.89 லட்சம் குடிநீர் கட்டணமாக வசூல் செய்து, அந்த பணத்தை ஊராட்சி கணக்கில் செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, முறைகேடு செய்த ரூ.5.89 லட்சத்தை, ஊராட்சி கணக்கில் செலுத்தும்படி, வட்டார வளர்ச்சி அலுவலர் குணாளன், ஊராட்சி செயலாளர் கந்தசாமிக்கு கடிதம் அனுப்பினார். அதையடுத்து, மோசடி செய்த பணத்தை, கடந்த இருதினங்களுக்கு முன்பு ஊராட்சி கணக்கில் கந்தசாமி செலுத்தியுள்ளார்.தற்போது கந்தசாமி, மோகனூர் ஒன்றியத்தில் உள்ள காளிபாளையம் ஊராட்சியில் செயலாளராக பணியாற்றி வருகிறார். கொமரிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் சுசிலா முருகேசனுக்கும், கந்தசாமிக்கும் இடையே கடந்த சில மாதத்துக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடை தொடர்ந்து, அவரை காளிபாளையம் ஊராட்சிக்கு கலெக்டர் மெகராஜ் இடமாறுதல் செய்தார். இந்நிலையில், அவர் செய்த முறைகேடு அம்பலத்துக்கு வந்துள்ளதால், கொமரிபாளையம் ஊராட்சி பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முறைகேடு நடந்தது எப்படி? அதிகாரிகள் விளக்கம்

போலி ரசீது மூலம் ஊராட்சி செயலாளர் முறைகேட்டில் ஈடுபட்டது எப்படி என்பது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த 2016-17ம் ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் கடும் வறட்சி ஏற்பட்டது. அப்போது, முறைகேடாக பயன்படுத்தப்படும் வீட்டு குடிநீர் இணைப்புகள், மற்றும் தனி நபர் குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும்படி, கலெக்டர் அனைத்து ஊராட்சி ஒன்றிய ஆணையாளருக்கும் உத்தரவிட்டார். இதை செயல்படுத்தும் பொறுப்பு ஊராட்சி செயலாளருக்கு வழங்கப்பட்டது. கொமரிபாளையம் ஊராட்சி செயலாளர், தனி நபர் குடிநீர் இணைப்புகளை துண்டிக்காமல், துண்டித்ததாக ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அலுவலகத்துக்கு தகவல் அனுப்பியுள்ளார்.

அதே நேரம் அந்த குடிநீர் இணைப்புகளுக்கு போலி ரசீது கொடுத்து பணம் வசூல் செய்துள்ளார். வறட்சி காலத்தில், தனி நபர் குடிநீர் இணைப்பில் தண்ணீர் குறைவாக வந்ததாலும், பொது இணைப்பில் 2 தினங்களுக்கு ஒரு முறை தண்ணீர் வந்ததாலும் பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்படவில்லை. இதை பயன்படுத்தி முறைகேடு நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 3 ஆண்டு ஊராட்சி கணக்கில் மட்டும் நடந்துள்ள முறைகேடு தான் தற்போது தெரியவந்துள்ளது. அதற்கு முந்தைய காலத்திலும் இது போன்ற முறைகேடு நடந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

Tags : Namakkal , Namakkal, fake receipt
× RELATED நாமக்கல் அருகே அதிமுக ஒன்றிய செயலாளர் வரதராஜ் கொரோனாவால் உயிரிழப்பு