×

தேனி அரசு மருத்துவமனையில் நோயாளிகளை குதறும் எலிகள்: கவனிப்பாரா கலெக்டர்?

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே உள்ள க.விலக்கு பகுதியில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இதில் தேனி மட்டுமின்றி திண்டுக்கல் மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினந்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகளும், ஆயிரத்திற்கு மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர்.

இந்நிலையில் எலி கடிப்பதாக நோயாளிகள் புகார் தெரிவிக்கின்றனர். 4 நாட்களுக்கு முன்பு சர்க்கரை நோயின் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நபரை எலி கடித்து குதறியது. இதனால் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இது நோயாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், எலித்தொல்லை குறித்து மருத்துவர் மற்றும், ஊழியர்களிடம் தெரிவித்தால் அவர்கள் அலட்சியமாக பதிலளிக்கின்றனர். இதுகுறித்து மருத்துவமனை முதல்வரிடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

வலைகள் ரெடி

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் இளங்கோவன் கூறுகையில், மருத்துவமனையில் எலி தொல்லை அதிகரிப்பதற்க்கு வளாகத்தில் உள்ள கேண்டீன் கழிவு பொருட்களை ஆங்காங்கே கொட்டுவது தான் காரணம். அதன் உரிமையாளர்களிடம் கழிவுப்பொருட்களை ஆங்காங்கே கொட்டக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளோம். மேலும் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் எலிகள் நுழையாதவாறு வலைகள் வைத்து அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறோம். மருத்துவமனை கட்டிடத்தை சுற்றியுள்ள அனைத்து ஓட்டைகளையும் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறோம் என்று தெரிவித்தார்.

Tags : Theni Government Hospital ,Collector , Theni, Government Hospital
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...