×

ஊட்டி, கொடைக்கானல் கூட திறந்தாச்சு: மூடி கிடக்குது வைகை அணை பூங்கா

ஆண்டிபட்டி: வைகை அணை பூங்கா பகுதி கொரோனா ஊரடங்கு காரணமாக அடைக்கப்பட்டுள்ளதால் நேற்று விடுமுறை தினத்தை முன்னிட்டு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஆண்டிபட்டி அருகே வைகை அணை பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்கா பகுதியில் வலது கரை பூங்கா மற்றும் இடது கரை பூங்கா என பிரிக்கப்பட்டு ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளது. இங்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து சுற்றுலாத் தலங்களையும் மூட அரசு உத்தரவிட்டது. இதனால் கடந்த 5 மாதங்களாக சுற்றுலா பயணிகள் தவித்து வந்தனர். கொரோனா வைரஸின் வேகம் குறைந்து கொண்டே வரும் நிலையில் ஊரடங்கில் அரசு தளர்வுகளை ஏற்படுத்தினர். இதில் தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களை திறக்க அரசு உத்தரவிட்டது.

இதுபோல் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை பூங்காவையும் திறந்து சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்குமாறு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் தற்போது வரை அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு வைகை அணை பூங்கா மூடப்பட்டிருக்கும் என தெரியாமல் தேனி மற்றும் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்தனர். ஆனால் வைகை அணை பூங்கா மூடப்பட்டிருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.சுற்றுலா பயணிகள் தெரிவிக்கையில், தேனி மாவட்டத்தில் சுற்றுலா தலத்திற்கு முக்கிய ஆதாரமாக இருக்கும் வைகை அணை பூங்காவை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வைகை அணை போலீசார் அவர்களுடைய உறவினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இருந்தால் பூங்காவை சுற்றிப்பார்க்க அனுமதி அளிக்கின்றனர். இத்தகைய செயலை போக்க வைகை அணை பூங்காவை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Ooty ,Kodaikanal ,Vaigai Dam Park , Vaigai Dam, Park
× RELATED ஊட்டி ஆவினில் தீ விபத்து