×

தூர்வாரி பல ஆண்டுகளாவதால் குவளைவேலி கண்மாய் மடைகள் சேதம்

மானாமதுரை: மானாமதுரை அருகே குவளைவேலி கிராமத்தின் பாசனக் கண்மாய் தூர்வாரி சீரமைக்கப்படாததால் தண்ணீர் வெளியேறும் மடைகள் மற்றும் வரத்துக் கால்வாய் சேதமடைந்துள்ளன. பருவமழை துவங்கும் முன் இக்கண்மாயை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் குவளைவேலி கிராமத்தில் கண்மாய் மூலம் 2,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வைகையாற்றிலிருந்து இக்கண்மாய்க்கு தண்ணீர் வரும் கால்வாய் 9 கி.மீ தூரம் உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக குவளைவேலி கண்மாய் தூர்வாரி சீரமைக்கப்படாததால் கண்மாய் ஆழம் குறைந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே தேக்க முடிகிறது.

காரணம் குவளைவேலி கண்மாயில் மடைகள் சேதமடைந்துள்ளதால், தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் கண்மாயின் உட்பகுதியில் குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே தேங்கியுள்ளது. இதுதவிர இக்கண்மாயிலிருந்து விவசாய நிலங்களுக்கு பாய்ச்சப்படும் 6 மடைகளும் சேதமடைந்துள்ளது. இதனால் கண்மாய்க்கு தண்ணீர் வரும் காலங்களில் தண்ணீரைத் தேக்க முடியாமல், மடைகள் வழியாக வீணாக வெளியேறி வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது குடிமராமத்து திட்டத்தின் கீழ் மானாமதுரை ஒன்றியத்தில் பல கண்மாய்கள்  தூர்வாரி சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால் குவளைவேலி கண்மாய் கண்டுகொள்ளப்படவில்லை என இக்கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் குவளைவேலி கண்மாயையும் குடிமராமத்து திட்டத்தில் சீரமைக்க வேண்டும் என்று கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிராமத்தினர் கூறுகையில், ‘‘ஒவ்வொரு ஆண்டும் வைகை அணையில் திறந்துவிடப்படும் தண்ணீர் குறைந்த அளவே வருகிறது. காரணம் வரத்துகால்வாய்கள் கருவேல மரங்களால் நிரம்பி தண்ணீரை தடுக்கிறது. அதேபோல கண்மாய் தூர்வாரி பல ஆண்டுகளாகிறது. மேலும் மடைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. இதனால் இரண்டாயிரம் ஏக்கரில் நடப்படும் நெற்பயிர்களுக்கு கடைசி நேரத்தில் போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. தற்போது மானாமதுரை ஒன்றியத்தில் நூற்றுக்கணக்கான கண்மாய்கள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டுள்ளன. எனவே எங்களது கிராமத்தின் கண்மாயினை அந்த திட்டத்தின் கீழ் சீரமைக்கவேண்டும் என்றனர்.

Tags : drought ,Kuvalaiveli Kanmai , folds, damage, dam
× RELATED காட்டு யானைகள் தாக்கி குடியிருப்புகள் சேதம்