×

பயன்படுத்தாமலேயே சேதமடையும் கழிப்பறை கட்டிடங்கள்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் கட்டப்பட்ட கழிப்பறை கட்டிடங்கள் பயன்படுத்தப்படாமலேயே சிதிலமடைந்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கழிப்பறை கட்டிடங்கள் கடந்த பல ஆண்டுகளாக கட்டப்பட்டு வருகின்றன. கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்து நகரங்களில் கழிப்பறை கட்டிடங்கள் கட்டப்படுகிறது. கிராமங்களில் சுகாதார வளாகம் என்ற பெயரில் கழிப்பறைகளும், குளியலறைகளும் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கட்டப்பட்ட கட்டிடங்கள் பெரும்பாலான இடங்களில் பல ஆண்டுகளாக பூட்டிய நிலையிலும், சில இடங்களில் இடிந்த நிலையிலும் காணப்படுகிறது. இவ்வாறு மாவட்டம் முழுவதும் ஊராட்சிகள் மட்டுமல்லாது பேரூராட்சி, நகராட்சிகளிலும் சுமார் 50சதவீத கழிப்பறை, குளியலறை கட்டிடங்கள் பயன்படுத்தப்படாமல் பூட்டியே கிடக்கிறது. வீடுகளில் முழு சுகாதார திட்டம் என்ற பெயரில் சுகாதாரத்தை மேம்படுத்துவதாக கூறி வெறும் நான்கு அடி உயரத்தில் மேற்கூரை இல்லாத கழிப்பறைகள் கட்டப்பட்டன. இவ்வாறு கட்டி முடிக்கப்பட்டபின் அந்த வீட்டிற்க்கு அரசு சார்பில் ஊக்கத்தொகையும் கொடுக்கப்பட்டது.

 நான்கடி உயர சுவர் வைத்து சம்பிரதாயத்துக்காக கட்டப்பட்ட இந்த கழிப்பறைகள் கட்டப்பட்டு ஊக்கத்தொகை வாங்கப்பட்ட சில மாதங்களில் இருந்த இடம் தெரியாமல் போனது. இது போன்ற கழிப்பறைகள் கட்டப்பட்ட அதிக எண்ணிக்கை கொண்ட வீடுகள் உள்ள ஊராட்சிக்கு முழு சுகாதாரம் பெற்ற ஊராட்சி என்ற விருதும் வழங்கப்பட்டது. மாவட்டத்தில் திறந்த வெளியில் மலம் கழிக்கும் நிகழ்வுகள் இன்றும் தொடர்ந்து கொண்டே வரும் நிலையில் மறுபுறம் கழிப்பறைகள் பயன்படுத்தப்படாமல் சிதிலமடைந்து வருகிறது. சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:கிராமங்களில் மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் இல்லாமல் எங்கு அரசுக்கு நிலம் உள்ளதோ அங்கு ஊருக்கு வெளியே, மக்கள் அதிகமாக செல்லாத இடங்களிலும் கழிப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் அவற்றை பயன்படுத்துவது குறைந்து போனது. ஊராட்சிகளில் கழிப்பறைகளை பராமரிக்க போதிய துப்புரவு பணியாளர்கள் இல்லை. தண்ணீர் வசதி செய்யப்படவில்லை.
கழிப்பறை கட்டிடம் கட்ட ஒரு முறை நிதி ஒதுக்கீடு செய்வதோடு அரசின் பணி முடிவடைவதில்லை. தொடர்ந்து பராமரிப்பிற்கும் நிதி ஒதுக்கீடு தேவை. மேலும் கிராமங்களில் ஏன் கழிப்பறையை பயன்படுத்தவேண்டும் என்ற விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.

இதுபோன்ற காரணங்களே கழிப்பறைகள் பயன்படுத்தப்படாமல் சிதிலமடையும் நிலைக்கு காணரம். கழிப்பறை இல்லாத வீடுகள் கணக்கிடப்பட்டு அங்கு சம்பிரதாயத்துக்காக இல்லாமல் முழுமையான ஒரு கழிப்பறையை கட்டுவதற்க்கு அரசு ஊக்கமளிக்கவேண்டும். பொதுக்கழிப்பறைகளுக்கு தண்ணீர், பராமரிப்பு உள்ளிட்டவைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.

Tags : toilet buildings , Toilet buildings
× RELATED அங்கன்வாடி மையம், சமுதாய கழிப்பறை கட்டிடங்கள் கட்ட பூமி பூஜை