×

அருந்தமிழ்குன்றம் அவலக்குன்றம் ஆனது: சிதைந்த சாலைகளால் தடுமாறும் அரக்கோணம் மக்கள்

அருந்தமிழ்குன்றம் என அழைக்கப்பட்டு, ஆறுகோணம் (காஞ்சிபுரம், தக்கோலம், மணவூர், திருவாலங்காடு, திருத்தணி, சோளிங்கர்) என்று மருவி அரக்கோணமாக மாறியது. மாவட்டத்தில் மிகப்பெரிய நகராட்சி அரக்கோணம். இந்நகரம் 9.06 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. 36 வார்டுகள் கொண்ட நகரின் மக்கள் தொகை 2011ம் ஆண்டு நிலவரப்படி 78,395 பேர். தற்போது 1 லட்சத்தை கடந்துள்ளது. நகர மக்களின் சராசரி கல்வியறிவு 90.8 சதவீதம். ஆயிரம் ஆண்களுக்கு 1,020 பெண்கள் உள்ளனர்.

சென்னைக்கு அருகில் வளர்ந்து வரும் நகரம் என்றாலும் அரக்கோணம் நகரம் இன்னும் முழுமையான வளர்ச்சியை பெறவில்லை என்பதே மக்களின் ஆதங்கமாகும். எங்கு பார்த்தாலும் கழிவுநீர் வழிந்தோடும் சாலைகள், காற்றில் பறக்கும் குப்பை கூளங்கள், சிதிலமடைந்த சாலைகள் போன்றவையே இந்நகரின் இப்போதைய அடையாளம்.

இந்நிலையில், அரக்கோணம் நகராட்சி பகுதிகளை ஒருங்கிணைத்து கடந்த 2015ம் ஆண்டு ரூ.100 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு, 4 ஆண்டுகளாக தொடர்ந்து 2019ம் ஆண்டு முடிக்கப்பட்டது. ஆனாலும் அரைகுறையாக விடப்பட்ட நிலையிலேயே உள்ளது. வீடு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு பாதாள சாக்கடை திட்டத்தில் இணைப்பு வழங்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஆனாலும், பாதாள சாக்கடை திட்டத்திற்காக அரக்கோணம் முழுவதும் 366 தெருக்களுக்கு மேல் பைப் லைன்கள் அமைக்க பள்ளங்கள் தோண்டப்பட்டு, ஒரு குறிப்பிட்ட சாலைகளில் மட்டும் தற்போது சிமென்ட், தார்ச்சாலைகள் போடப்பட்டுள்ளன.

மற்ற சாலைகள், தெருக்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தும் சாலைஅமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், குண்டும், குழியுமாக, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ள சாலைகளை வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமத்தோடு பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல், அரக்கோணத்தில் அரசு மருத்துவமனை உள்ளது. இம்மருத்துவமனையில் உயர் மருத்துவ சிகிச்சை பெறும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. விபத்து, உயிர்காக்கும் சிகிச்சைகளுக்கு கூட சென்னை, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

இதனை தவிர்க்க நவீன மருத்துவ உபகரணங்கள், உட்கட்டமைப்புகளுடன் மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையாக உருவாக்குவதுடன், போதிய அளவில் டாக்டர்களை நியமிக்க வேண்டும். இதேபோல் அரக்கோணம் நகரின் மைய பகுதியில், பழமையான கட்டிடங்களிலும், குறுகலான சாலைகளுடனும் உள்ள காய்கறி மற்றும் மீன் மார்க்கெட்டையும் புதுப்பிக்க வேண்டும். இதுதவிர போக்குவரத்து நெரிசலும் நகரை அலைக்கழித்து வருகிறது. குறிப்பாக காந்தி சாலை வழியாக வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் நாள்தோறும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனால் அடிக்கடி சிறு விபத்துக்கள் நடப்பதுடன், அவசரகால சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பணிகளுக்கு செல்வதில் இடையூறு ஏற்பட்டு வருகிறது.

இதனால் நீண்டகாலமாக கிடப்பில் உள்ள புறவழிச்சாலை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர். அரக்கோணம் பழனிப்பேட்டையில் பழமையான ரயில்வே இரட்டைக்கண் வாராவதியில் அடிக்கடி கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிரமத்துள்ளாகி வருகின்றனர். இதன் அருகில் பெயரளவில் பராமரிப்பின்றி உள்ள சுரங்க நடைபாதையும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
நெரிசலை தவிர்க்க ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட்ட நிலையில் அரக்கோணம்- சோளிங்கர், அரக்கோணம்-காஞ்சிபுரம், அரக்கோணம்- திருத்தணி செல்லும் ரயில்வே மேம்பாலங்கள் இருட்டில் தள்ளப்பட்டுள்ளதால், அடிக்கடி விபத்து, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் நடந்து வருகிறது.

இதேபோல் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் புழங்கும் புதிய பஸ் நிலையத்தில் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இத்தகைய அடுக்கடுக்கான அவசியமான தேவைகளுடன் தள்ளாடும் அரக்கோணம் நகரில் விளையாட்டு அரங்கமும் இல்லை. பொழுதுபோக்கு பூங்காக்களும் பராமரிக்கப்படவில்லை என்பது வேதனையான ஒன்று. இத்தனை தேவைகள், அடிப்படை பிரச்னைகளுடன் உள்ள அரக்கோணம் நகர மக்களின் கோரிக்கைகளுக்கு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் செவிசாய்த்து, பல்வேறு திட்டங்களை உடனுக்குடன் நிறைவேற்றினால், அரக்கோணம் நகரம் வளர்ச்சி அடையும் என்பதில் சந்தேகமில்லை.

Tags : Arunthamilkunram ,roads ,Arakkonam , aruntamilkuntram, arakkonam
× RELATED பணப் பட்டுவாடாவை ஆதாரத்துடன்...