×

டிஆர்பி மூலம் தேர்ச்சி பெற்று 3 ஆண்டுகளாகியும் பணி நியமனம் கிடைக்காமல் தவிக்கும் உடற்கல்வி ஆசிரியர்கள்

சேலம்: தமிழகத்தில் டிஆர்பி மூலம் தேர்ச்சி பெற்று 3 ஆண்டுகளாகியும், பணி நியமனம் பெற முடியாமல் 536 உடற்கல்வி ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தவும், உடல் நலத்தை சீராக பராமரிக்கவும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை-I, உடற்கல்வி இயக்குநர் நிலை-II என 4,500க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். அதேசமயம் 2 ஆயிரத்திற்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனிடையே, டிஆர்பி மூலம் தேர்வு செய்யப்பட்டும் 536 உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, கடந்த 3 ஆண்டுகளாக பணி வழங்கப்படாததால் தவிப்பில் உள்ளனர். எனவே, நடப்பாண்டாவது அவர்களுக்கான பணிநியமன ஆணை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து உடற்கல்வி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:

தமிழக அரசுப்பள்ளிகளில் 525 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் எனவும், கூடுதலாக இருந்தால் மேலும் ஒரு உடற்கல்வி ஆசிரியர் எனவும், ஆயிரம் பேருக்கு அதிகமானோர் உள்ள பள்ளிகளில் உடற்கல்வி இயக்குநரும் நியமிக்க வேண்டும். ஆனால், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியிடம் உருவாக்கி பல வருடங்கள் ஆகி விட்டன. கடந்த 2012ம் ஆண்டுக்கு பிறகு, 8 ஆண்டுகளாக புதிய நியமனம் எதையும் மேற்கொள்ளாததால், ஏற்கனவே உருவாக்கப்பட்ட பணியிடங்களில் சுமார் 2 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதனிடையே, கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உடற்கல்வி, தையல், இசை, ஓவியம் உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணியிடத்திற்கான தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடந்தது. மொத்தம் 663 உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்திற்கு நடந்த இத்தேர்வில், 536 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி தேர்வர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆனால் அதன்பின்னர், இன்று வரை அவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. நீதிமன்ற வழக்கு இந்த தாமதத்திற்கு காரணமாக கூறப்பட்டாலும், அதன் பின்னர் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் பணி வழங்கியிருக்க வேண்டும். அதே சமயத்தில், தேர்வு நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்ற, தையல், இசை, ஓவிய ஆசிரியர்கள் பணியில் சேர்ந்து ஒன்றரை வருடங்களை கடந்துவிட்டது. ஆனால், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மட்டும் பணி வழங்காமல் வஞ்சிப்பது வேதனை அளிக்கிறது.

இதனால், 536 ஆசிரியர்கள் மட்டுமின்றி அவர்களின் குடும்பங்களும் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளன. பணிநியமனம் கோரி, பல்வேறு அலுவலகத்தில் போராட்டம் நடத்தியும், மனு அளித்தும் இதுவரை எந்தவித பலனும் இல்லை. பல கனவுகளுடன் கஷ்டப்பட்டு படித்து தேர்வெழுதி வெற்றிபெற்ற உடற்கல்வி ஆசிரியர்கள், பணிநியமனம் பெற நீண்ட காலமாக காத்திருப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் உடனடியாக பணி ஆணை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பணி பெறாமலேயே ஓய்வு பெற்ற கொடுமை

கடந்த 2017ம் ஆண்டு 663 உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு டிஆர்பி மூலம் தேர்வு நடந்தது. இதில், 536 பேர் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பும் நடத்தப்பட்டது. அவர்களில் 23-30 வயதிற்குள் 26 பேரும், 31-35 வயதிற்குள் 109 பேரும், 36-40 வயதிற்குள் 260 பேரும், 41-45 வயதிற்குள், 118 பேரும், 46-50 வயதிற்குள் 20 பேரும், 51-55 வயதிற்குள் 3 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக பணி நியமனம் வழங்கப்படாத நிலையில், டிஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்றும், பணி கிடைக்காமலேயே ஓய்வு பெற்ற கொடுமையும் நடந்துள்ளது. இதனால், அவர்கள் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர். மேலும் பலருக்கு பணி காலமும் குறைந்துள்ளது.

Tags : teachers ,DRP , Physical education teachers, appointment
× RELATED கல்வி அதிகாரி நேரடி விசாரணை...