×

கிசான் திட்ட மோசடியை போன்றே அம்மா ஸ்கூட்டர் வழங்கியதிலும் மெகா ஊழல்

விழுப்புரம்: கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் கிசான் திட்ட மோசடியைப் போன்றே, தமிழக அரசின் அம்மா ஸ்கூட்டர் வழங்கிய திட்டத்திலும் மெகா ஊழல் நடந்திருப்பதாக புகார்கள் குவிந்து வருகின்றன. இதில், ஆளுங்கட்சியினரே இடைத்தரகர்களாக செயல்பட்டுள்ளனர். இந்த மோசடி குறித்து, விசாரணை நடத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டிலேயே கவர்ச்சித் திட்டங்கள் அறிவிப்பதில் தமிழகம்தான் பெயர் போனதாக உள்ளது. அந்த வரிசையில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, ரூ.25 ஆயிரம் மானியத்தில், தமிழக அரசால், ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும், நிதி ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளில், பிரதமர் மோடி இத்திட்டத்தை துவக்கி வைத்தார். மானியத் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த, மோடியே, இதனை துவக்கி வைத்தது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அம்மா ஸ்கூட்டி திட்டத்தில், எந்த நிறுவன வாகனத்தையும், அரசின் மானியத்தில் பெறலாம். அது, 125 சி.சி திறனுள்ள, கியர் இல்லாத வாகனமாகவும் இருக்க வேண்டும். இந்த ஸ்கூட்டரை மூன்றாண்டுகளுக்கு விற்க முடியாது போன்ற விதிமுறைகளை தமிழக அரசு வகுத்திருந்தது.

தமிழக அரசின், கிராமப்புற வாழ்வாதார திட்டம் மற்றும் மானிய விலை ஸ்கூட்டர் திட்ட இயக்குனர் அனுமதி இல்லாமல், மூன்றாண்டுகளுக்கு வாகன உரிமையை மாற்ற முடியாது. இதை உறுதிப்படுத்தும் வகையில், வாகன உரிமையாளருக்கு வழங்கப்படும் ஆர்.சி புத்தகத்தில், ‘இருசக்கர வாகன மானிய திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இந்த வாகனத்தை, மூன்றாண்டுகளுக்கு விற்கவோ, உரிமம் மாற்றமோ செய்யக்கூடாது’ என, ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. எவ்வளவோ கட்டுப்பாடுகளை விதித்த, தமிழக அரசு இந்த திட்டத்திலும் நடைபெறும் மெகா ஊழலை தடுக்க முடியாமல் கோட்டை விட்டது மகளிர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்போது மத்திய அரசின் பிரதமர் கிசான் நிதி உதவித்திட்டம், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பலகோடி ஊழல் என்ற குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக வைக்கப்பட்ட நிலையில், தற்போது, அம்மா ஸ்கூட்டர் வழங்கியதிலும் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. பயனாளிகள் தேர்வில், பல லட்சத்தை குவிப்பதாக அதிகாரிகள் மீதும், இடைத்தரகர்களாக செயல்படும் ஆளுங்கட்சியினர் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

ஆண்டிற்கு ரூ.2.50 லட்சம் வருமான சான்றிதழ் மட்டுமே தகுதியாக கருதப்பட்ட நிலையில், 25 ஆயிரம் பேர் விண்ணப்பிப்பதில், பயனாளிகள் தேர்வில் பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே, மானியத்தொகை வங்கிக்கணக்கில் செலுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கிராம ஊராட்சிகளுக்கு அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும், பேரூராட்சிப் பகுதிகளுக்கு செயல் அலுவலரிடமும், நகராட்சிப் பகுதிகளுக்கு, ஆணையர் அலுவலகத்திலும் விண்ணப்பிக்கவேண்டும். இவ்வாறு விண்ணப்பித்ததில், பயனாளிகள் தேர்வில் தகுதியில்லாத நபர்களிடம், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் கொடுக்கும் பட்டியல்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சில அதிகாரிகள் கமிஷன் பெற்றுக்கொண்டு அவர்களின் பங்கிற்கு கூட்டு சேர்ந்து, பல லட்சம் பெற்று, இந்த திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனவே, இதுகுறித்து விசாரணைக் கமிட்டி அமைத்து முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சி பிரமுகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

ஆய்வுக்கு வருபவர்களுக்கு 500 கப்பம் கட்டுகிறோம்

வேலைக்கு செல்லும் பெண்கள், இருசக்கர வாகனங்கள் வாங்க, 25 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கும், ‘அம்மா ஸ்கூட்டர்’ திட்டத்திற்கு 2017- 2018ல் தமிழக அரசு ரூ.250 கோடியும், இதேபோன்று 2018-19ம் ஆண்டிற்கும், நடப்பாண்டிற்கும் (2019-2020) நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் முழுவதும் சராசரியாக 5 லட்சம் பேர் விண்ணப்பிக்கின்றனர்.

விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மட்டும் 25 ஆயிரம் பேர் அம்மா ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்கின்றனர். விண்ணப்பங்களை ஆய்வு செய்ய, விண்ணப்பித்தோரின் விபரங்களை அறிய, உள்ளாட்சி ஊழியர்கள், நேரடியாக கள ஆய்வுக்கு வரும்போது,, விண்ணப்பம் சரி என, அதிகாரிகளுக்கு பரிந்துரைக்க ரூ.500 கப்பம் கட்டுவதாக பெண்கள் தெரிவித்தனர். ஏற்கனவே, ‘சிபாரிசு செய்கிறோம்’ என, ஆளுங்கட்சி பிரமுகர்கள், 5,000 ரூபாய் வசூல் நடத்தி வரும் நிலையில், கள ஆய்வுக்கு வருவோரும் பணம் கேட்பதாக விண்ணப்பித்த பெண்கள் வேதனை தெரிவித்தனர்.

தகுதியில்லாத பயனாளிகளிடம் மானிய தொகையை திரும்ப பெறவேண்டும்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சரவணன் கூறுகையில், தமிழக அரசு தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் மற்றும் சுயதொழில் செய்யும் பெண்களுக்கு அரசு மானியத்தில் இருசக்கர வாகனங்களை வழங்குவதற்கான திட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் சுமார் 3 ஆயிரம் ஸ்கூட்டிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. முறையாக பணியில் உள்ள பெண்களின் விண்ணப்பங்களை பெற்று பரிசீலனைசெய்து தகுதி அடிப்படையில் எவ்வித முறைகேடுகளுக்கும் இடமின்றி வழங்கிடவேண்டும். மாவட்டத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் ஸ்கூட்டர் கேட்டு விண்ணப்பித்துள்ள நிலையில், ஆளும்கட்சியினர் கொடுக்கும் பட்டியலுக்கு கமிஷன் பெற்றுக் கொண்டு தகுதியற்ற விண்ணப்பதாரர்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருவது இது குறித்து விரிவான விசாரணை நடத்தி தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சியினர் மீது வழக்குபதிவு செய்து வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட மானியத்தையை திரும்ப பெறவேண்டும் என்றார்.

5 ஆயிரம் கட்டாயம்

அம்மா ஸ்கூட்டர் பயனாளிகள் தேர்வு விவகாரத்தில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் கொடி கட்டி பறப்பதாக கூறப்படுகிறது. அம்மா ஸ்கூட்டர் வாங்க விரும்பும் பெண்கள், நேரிடையாக அரசு அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பம் அளிக்க முடிவதில்லை. இடைத்தரகர்கள் மூலமாகவே அவர்கள் விண்ணப்பம் கொடுக்க முடிகிறது. விண்ணப்பத்துடன் ஓட்டுனர் உரிமம், வங்கி பாஸ் புத்தகம், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் ரூ.5 ஆயிரமும் கட்டாயமாக இடைத்தரகர்களிடம் கொடுத்தால் மட்டுமே அந்த விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

Tags : scandal , Amma Scooter, Corruption
× RELATED பே-பிஎம் ஊழலில் புதிய தகவல்; 20 புதிய...