விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த முதல்வர் பழனிசாமி பதவி விலக வலியுறுத்தி முழக்கம் :150 விவசாயிகளை கைது செய்து போலீஸ் அதிரடி!!

சென்னை:  வேளாண் திட்ட மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னை பாரி முனையிலிருந்து கோட்டை வரை சாலை மறியல் போராட்டமானது நடைபெற்று வருகிறது. இதில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டுள்ளனர். விவசாயம் தொடர்பாக 3 மசோதாக்களுக்கு கடந்த ஜூன் மாதம் 5ம் தேதியன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின்னர், இந்த 3 மசோதாக்களும் நடப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதாவது, அத்தியாவசிய பொருட்கள் திருத்தம் 2020, விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக சட்டம் 2020, விவசாயிகளுக்கு விலை உத்திரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 என்கிற 3 சட்டங்களானது அமலுக்கு வந்துள்ளது. இதற்கு ஆதரவு தெரிவித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், நாடு முழுவதும் இந்த 3 மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமானது ஆங்காங்கே அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதற்கிடையில் தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக, காங்கிரஸ் மற்றும் இடது சாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள்  எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வேளாண் பெருமக்களை நசுக்கும் வகையிலும், விவசாயத்தை சீரழிக்கும் வகையிலும் அமைந்திருக்கும் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டுமென்றும், தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த முதல்வர் பதவி விலக வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பெ.செண்பகம் தலைமையில் போராட்டமானது நடைபெற்று வருகிறது.

 அதாவது, சென்னை பாரி முனையிலிருந்து ஜார்ஜ் கோட்டை வரை விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அசம்பாவிதத்தை தடுக்கும் பொருட்டு 500க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 150க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்து சமூக நல கூடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து போராட்டமானது நடைபெற்று வருகிறது. இதனால் பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

Related Stories:

>