×

எப்போ கேட்கும் மைக்செட் சத்தம்...? கொரோனா தளர்வுக்குப் பிறகும் அனுமதியில்லை

அருப்புக்கோட்டை: கொரோனா தளர்வு அறிவிக்கப்பட்ட பிறகும் மைக் செட் தொழிலுக்கு அரசு அனுமதி வழங்காததால் அத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஏராளமான தொழிலாளர்கள் பசி, பட்டினியால் வாடி வருகின்றனர். அத்துடன் பொருட்களை அடமானம் வைத்து வாழ்க்கையை கழிக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று பரவலால் கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கோயில் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகள் நடத்த. தடைவிதிக்கப்பட்டது. இதனால் 6 மாதமாக எந்த நிகழ்ச்சியும் நடக்கவில்லை. திருவிழா, திருமணம் உள்ளிட்ட எந்த விசேஷம் என்றாலும் மைக்செட் இல்லாமல் நடப்பதில்லை. கொரோனா தொற்று ஊரடங்கால் 6 மாதங்களாக மைக்செட் தொழில் முடங்கி கிடக்கிறது. இதனால் இத்தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் வருமானமின்றி வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் பஸ் போக்குவரத்து, ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்கள், கோயில்களை திறக்க அரசு அனுமதி வழங்கியது. ஆனால், நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தும் மைக் செட் தொழிலுக்கு மட்டும் அனுமதி வழங்கவில்லை. சிறிய அளவில் மைக்செட் தொழில் செய்பவர்கள் 6 மாதகாலமாக குடும்பம் நடத்த போதிய வருவாயின்றி மைக்செட் பொருட்களைஅடமானம் வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். எனவே, திருவிழாக்கள் மற்றும் திருமணங்களுக்கு மைக்செட் அமைக்க அரசு அனுமதி வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாலவநத்தத்தை சேர்ந்த மைக்செட் உரிமையாளர் பெருமாள் கூறுகையில், ``கொரோனா ஊரடங்கால் 6 மாதமாக மைக்செட் தொழில் நலிவடைந்து விட்டது. மைக்செட் பொருட்கள் உபயோகம் இல்லாததால் சேதமடைந்து வருகிறது. வங்கிகளில் கடன் வாங்கி தொழில் செய்து வருகிறோம். கொரோனாவால் தொழில் இழந்திருக்கும் எங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். அனைத்து விசேஷ நிகழ்ச்சிகளுக்கும் மைக்செட் பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும்’’ என்றார்.

Tags : mikeset ,Corona , Corona, Mike Set
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...