×

தமிழக அரசு உறுதியளித்தபடி அரசுப்பணி வழங்கவில்லை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தோரின் குடும்பம் வேதனை!!!

தூத்துக்குடி: முதலமைச்சரை சந்திக்க பலமுறை அனுமதி கேட்டும் அமைச்சர்களும் அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை என தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி நடந்த போலீஸ் துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் பலியாகினர். தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.

அதன்படி விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு கல்வித்தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கப்படும் என தமிழக அரசு உறுதி அளித்திருந்தது. இந்நிலையில் அரசு உறுதி அளித்தபடி பணி வழங்கவில்லை என துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக தூத்துக்குடிக்கு வருகை தரவுள்ள முதலமைச்சரை நேரில் சந்திக்க பலமுறை அனுமதி கேட்டும் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்பது அவர்களின் குற்றச்சாட்டாகும். மேலும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு தூண் அமைக்கவேண்டும் என்பது போன்ற நியாயமான கோரிக்கைகளை அரசு இதுவரை நிறைவேற்றவில்லை என்றும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே தூத்துக்குடிக்கு வரும் முதலமைச்சரை சந்தித்து இதுகுறித்து முறையிட மாவட்ட நிர்வாகம் அனுமதி தர வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை.

Tags : Government ,Tamil Nadu ,victims ,Sterlite ,protest ,Thoothukudi , Government of Tamil Nadu, Government Service, Thoothukudi, Sterlite, Pain
× RELATED தமிழகத்தில் 2021ஆம் ஆண்டில் 23 நாட்கள் அரசு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு..!!