வேளாண் மசோதா நகலை கிழித்து வீசி ஆவேசம்.. எதிர்க்கட்சிகளை சேர்ந்த 8 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்தார் வெங்கையா நாயுடு!!

டெல்லி : மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகளை சேர்ந்த 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அமளியில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.

கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வேளாண் மசோதா நிறைவேற்றம்..

கொரோனா பாதிப்புக்கு இடையே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இதில், வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இம்மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகளும், நாடு முழுவதும் விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மக்களவையில் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய 2 வேளாண் மசோதாக்கள், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நேற்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. கடும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், மசோதா நகலை கிழித்து எறிந்து, அவைத் தலைவர் மீது விதி புத்தகத்தை வீசி எறிந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. மசோதா நிறைவேற்றப்பட்டதும் அவையிலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

இந்த நிகழ்வுகளை தொடர்ந்து அவை துணைத்தலைவர் ஹரிவன்சுக்கு எதிராக 12 எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர அவைத்தலைவரிடம் நோட்டீஸ் அளித்து உள்ளனர். ஆனால், இந்த தீர்மானத்தை ஏற்க மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு மறுத்துவிட்டார்.  

இந்த நிலையில், நேற்று மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் ஒருவாரம் இடைநீக்கம் செய்யப்படுவதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார்.

அவையில் பேசிய வெங்கையா நாயுடு, ‘மாநிலங்களவைக்கு நேற்று மோசமான நாள். அவையின் துணைத்தலைவர் மிரட்டப்பட்டுள்ளார், அவர் தனது கடமையைச் செய்ய விடாமல் தடுக்கப்பட்டுள்ளார். இது துரதிர்ஷ்டவசமானது, கண்டிக்கத்தக்கது. உங்களின் செயலை தயவு செய்து கொஞ்சம் ஆராய்ந்து பாருங்கள். அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்கள் டெரிக் ஓ பிரையன், சஞ்சய் சிங், ராஜூ சதவ், கே.கே.ராஜேஷ், ரிபுன் போரா, டோலா சென், சையத் நசீர் உசைன், இளமாறன் கரீம் ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்கள்’ என அவைத்தலைவர் உத்தரவிட்டார்.

Related Stories:

>