×

கர்நாடகாவில் கனமழை: வெள்ளக்காடானது உடுப்பி, மங்களூரு

பெங்களூரு: கர்நாடகாவில் கொட்டிய கனமழையால் உடுப்பி, மங்களூரு மாவட்டங்கள் கடுமையாக பாதித்தது. கர்நாடகாவில் உள்ள கடலோர மாவட்டங்கள், மலைநாடு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், இருதினங்களாக கனமழை விடாமல் வெளுத்து வாங்கியதில் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடானது. குறிப்பாக தென்கனரா மாவட்டம், உடுப்பி, மங்களூரு ஆகிய இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. உடுப்பி, மங்களூரு பகுதியில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்ததில் ஏரமாளமான வீடுகள் மூழ்கும் நிலை ஏற்பட்டது.

உடுப்பி மாவட்டம் பிரம்மாவரா தாலுகாவில் பெய்த மழையில் அந்த பகுதியில் இருந்த கிராமம் முழுவதும் நீரில் மூழ்கியது. இதேபோன்று கார்வார், சிக்கமகளூரு, குடகு, ஷிவமொக்கா, வடகர்நாடக மாவட்டங்களான கொப்பள், பெலகாவி, கலபுர்கி, தார்வார்ட், கதக் ஆகிய மாவட்டங்களில் கன பெய்தது. இந்த மழையால் ஹேமாவதி, பீமாநிதி, குடகு மாவட்டம் தலைகாவேரி, பாகமண்டலாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மங்களூருவில் 3 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அதில் ஒருவர் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும், வீடுகள் இடிந்து விழுந்ததில் பலர் காயமடைந்துள்ளனர். 100க்கும் அதிகமான வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் சிக்கிய மக்களை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து வருகின்றனர். மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்பதால், இம்மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. 50 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு: கனமழை காரணமாக கபினி அணை நிரம்பியதால் காவிரியில் 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கேஆர்எஸ் அணையும் நிரம்பியுள்ளதால், அதில் இருந்து 15 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இந்த 50 ஆயிரம் கனஅடி தண்ணீரும் விரைவில் தமிழகம் சென்றடையும்.

Tags : Karnataka ,Mangalore ,Flood forest Udupi , Heavy rains in Karnataka: Flood forest Udupi, Mangalore
× RELATED கர்நாடகா கோயிலில் தீப்பந்தங்களை வீசி நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள்