×

ஹைய்யா... பிஜிலி! 10 ஆயிரம் அடி உயர மலை கிராமத்தில் 74 ஆண்டுக்கு பிறகு துள்ளி குதித்த மக்கள்

ஜம்மு: காஷ்மீரின் வடக்குப் பகுதியான குப்வாரா மாவட்டத்தில் உள்ளது கெரன், மச்சில் என்ற இரு மலைவாழ் கிராமங்கள். இந்த கிராமங்களுக்கும் மின்சார வசதி தற்போதுதான் கிடைத்துள்ளது. இம்மாவட்ட துணை ஆணையரான அன்சுல் கார்க் கூறியதாவது, கடந்த 2019ம் ஆண்டு குப்வாரா மாவட்டத்தின் துணை ஆணையராகப் பொறுப்பேற்ற, என்னை சந்திக்க வந்தார்கள் கெரன், மச்சில் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். நாங்கள் ஆர்வத்துடன் தேர்தலில் பங்கேற்கிறோம்.  ஆனாலும், மின்சார வசதி இன்னும் எங்களுக்கு இல்லையே’ என்று வருத்தத்துடன் சொன்னார்கள்.  அது, என்னை மிகவும் பாதித்தது. சிறிது நேரம் மின்சாரம் இல்லாமல் இருந்தாலே எவ்வளவு அவதிப்படுகிறோம்.

எப்படி இவர்களால் இத்தனை வருடங்களாக வாழ முடிகிறது என்று வேதனை அடைந்தேன். 10 ஆயிரம் அடி உயரத்தில் இருந்தது அந்த கிராமங்கள். மின்சார வசதி என்பது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை. எனவே, அவர்களின் கஷ்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முடிவு செய்தேன். இந்தியா - பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் இந்த கிராமங்கள் இருந்ததால் அரசு அலுவலகங்களில் அனுமதி கிடைப்பதில் நிறைய சவால்கள் இருந்தன. மின் கம்பங்கள் அமைப்பது இன்னும் சிக்கலாக இருந்தது. கொரோனா ஊரடங்கு, 370 சிறப்பு அந்தஸ்து நீக்கம் போன்ற எதிர்பாராத காரணங்களால் எங்கள் பணிகளில் மேலும் தொய்வு ஏற்பட்டது.

ஒருவழியாக எங்களின் திட்டமும், கிராம மக்களின் கனவும் இப்போது நிறைவேறிவிட்டது. முதல்முறையாக மின் விளக்கு எரிந்ததும், ‘பிஜிலி’ என்று அந்த மக்கள் உற்சாக கூச்சலிட்டனர். அது பெரிய திருப்தி அளித்தது. இவ்வாறு அவர் கூறினார். நாடு சுதந்திரம் அடைந்து 74 ஆண்டுகளுக்குப் பிறகு,இம்மக்கள் மின் வெளிச்சத்தை பார்த்துள்ளனர்.

Tags : Bijli ,mountain village , Hi ... Bijli! People jumping after 74 years in a 10 thousand feet high mountain village
× RELATED மழை பெய்தாலே குண்டும், குழியும்தான் கன்னிகாபுரம் மக்கள் புலம்பல்