ஆன்லைன் வகுப்பில் பாடம் புரியாததால் தொடரும் விபரீதங்கள்; மருத்துவ மாணவன், கல்லூரி மாணவி தற்கொலை: அதிர்ச்சியில் தாத்தாவும் பலி

சென்னை: ஆன்லைன் வகுப்பில் நடத்தப்பட்ட பாடங்கள் புரியாத நிலையில் இருவேறு இடங்களில் மருத்துவக் கல்லூரி மாணவன் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி ஆகிய 2 பேர் இதற்கொலை செய்து கொண்டனர்.

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்பு தொடங்கியதில் இருந்து செல்போன் பிரச்னை, டேட்டா பிரச்னை மற்றும் பாடங்களை புரிந்து கொள்வதில் பிரச்னை என மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி பல்வேறு விபரீத முடிவுகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை ராமாபுரம் கண்ணதாசன் நகரை சேர்ந்த ஆகாஷ் (22). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 2ம் ஆண்டு மருத்துவ படிப்பு  படித்து வந்தார்.

வீட்டிலிருந்து ஆன்லைன் வகுப்பில் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று தனது அறைக்குள் சென்ற ஆகாஷ், நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த பெற்றோர் உள்ளே சென்று பார்த்தபோது ஆகாஷ் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே, அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதனையில் ஆகாஷ் இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து ராயலா நகர் போலீசார் விசாரணையில், ஆன்லைன் வகுப்பில் பாடங்கள் புரியாததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ஆகாஷ், மனநல ஆலோசகர்களை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆனால், செல்போனில் முழுமையான ஆலோசனை பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், மன அழுத்தம் அதிகரித்து ஆகாஷ் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆகாஷ் இறந்த செய்தியை கேட்டு வீட்டிற்கு வந்த அவரது தாத்தாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவரும் இறந்துவிட்டதாக கூறினர். ஒரு ஆன்லைன் வகுப்பால் ஒரே வீட்டில் 2 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அதேபோல சோழவரம் அடுத்த அருமந்தை குடியிருப்பு பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் கிரி. இவருடைய மகள் தர்ஷினி(19). இவர் சென்னை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பிஎஸ்சி முதலாமாண்டு படித்து வருகிறார். இவரும் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வந்தார்.

ஆன்லைன் வகுப்பில் நடத்தப்படும் பாடங்கள் இவருக்கும் புரியவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தர்ஷினி நேற்று முன் தினம் மாலை தனது அறையில், மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றார். இதனைப் பார்த்த அவரது பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தர்ஷினியை மீட்டு செங்குன்றத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை 9 மணி அளவில் தர்ஷினி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை சுற்றுவட்டாரத்தில் ஆன்லைன் வகுப்பு விபரீதத்தால் பாடங்கள் புரியவில்லை என்று 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். ஒருவர் பேரன் மீது உள்ள பாசத்தால் அவனது இறப்பு தாங்க முடியாமல் இறந்ததும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>