×

கோவிஷீல்டு பரிசோதனை விரைவில் தொடக்கம் தமிழகத்தில் 300 தன்னார்வலர்களுக்கு அனுமதி

சென்னை: ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்துள்ள ‘கோவிஷீல்டு’ என்ற தடுப்பூசி பரிசோதனையை 300 தன்னார்வலர்களிடம் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. எனவே, தமிழகத்தில் விரைவில் பரிசோதனை தொடங்கும் என தெரிகிறது. இந்தியாவின் ஒடிசா மாநிலம், புவனேஸ்வரைச் சேர்ந்த சீரம் நிறுவனம், பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலை உருவாக்கியுள்ள, ‘கோவிஷீல்டு’ என்ற கொரோனா தடுப்பூசியை, ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளது. கடந்த மாதம், கொரோனா தடுப்பூசியை, மனிதர்களிடம் செலுத்தி பரிசோதிப்பதற்கான அனுமதியை சீரம் நிறுவனம் பெற்றது.

இதையடுத்து, சென்னையில் ராஜுவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் ராமசந்திரா மருத்துவமனை ஆகியவற்றில் மனிதர்களிடம் பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஒரு மருத்துவமனையில் 100 முதல் 120 பேர் என்ற அடிப்படையில் 300 பேரிடம் சோதனை நடத்தலாம். இதன் கண்காணிப்பாளராக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையில் இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பல்வேறு காரணங்களால் கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனை திடீரென நிறுத்துவதாக ஆக்ஸ்போர்ட் நிறுவனம் கடந்த வாரம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து இந்தியாவிலும் இந்த சோதனை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் சில நாட்களுக்கு பிறகு கோவிஷீல்ட் தடுப்பூசி சோதனையை மீண்டும் தொடங்க ஆக்ஸ்போர்ட் நிறுவனம் அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் பரிசோதனையை தொடங்க சீரம் நிறுவனத்துக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி அளித்தது. இந்நிலையில் சென்னையில் இந்த தடுப்பூசி சோதனை அடுத்த வாரம் தொடங்க வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பரிசோதனையில் கலந்து கொள்ளும் 300 தன்னார்வலர்கள் தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய பட்டியலுக்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : volunteers ,Tamil Nadu , Govt Shield test to start soon 300 volunteers allowed in Tamil Nadu
× RELATED அண்டாவை தூக்கிச் சென்ற பறக்கும்படை; பிரியாணி போச்சே தொண்டர்கள் புலம்பல்