×

தொளவேடு கிராமத்தில் குண்டும் குழியுமாக மாறிய கிராம சாலை: சீரமைக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை: தொளவேடு கிராமத்தில் குண்டும், குழியுமாக மாறிய கிராம சாலையை சீரமைத்து தர அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை  அருகே தொளவேடு கிராமத்தில் அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் என 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், வேலைக்கு செல்வதற்கும், விவசாயிகள் கோயம்பேட்டிற்கு பூ, காய்கறி போன்றவற்றை எடுத்து செல்வதற்கும், மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்கும் காக்கவாக்கம்-தொளவேடு கிராம சாலையை பயன்படுத்தி தண்டலம், பாலவாக்கம் பகுதிகளுக்கு சென்று அங்கிருந்து சென்னை, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில், காக்கவாக்கம்-தொளவேடு  கிராம சாலை குண்டும், குழியுமாக மாறி படுமோசமாக காணப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் புதிதாக சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன்படி, கடந்த 6 வருடத்திற்கு முன்பு சாலை அமைக்கப்பட்டது. ஆனால், கடந்த வருடம் இறுதியிலும், தற்போதும்   பெய்த மழைக்கு  கிராம சாலை  குண்டும் குழியுமாக மாறி பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த சாலையில் பைக், ஆட்டோ, டிராக்டர் போன்ற வாகனங்களும், பள்ளி வாகனங்களும் செல்ல  மிகவும் சிரமம் ஏற்படுகிறது. மேலும், இரவு நேரத்தில் கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது.

எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து காக்கவாக்கம்-தொளவேடு பகுதி மக்கள் கூறுகையில், “எங்கள் கிராமத்தில் 6 வருடத்திற்கு முன்பு சாலை அமைத்தனர். இந்த கிராம சாலை மழையால் குண்டும் குழியுமாக மாறிவிட்டது. அதை சீரமைக்கவில்லை. இந்த சாலைக்கு பதில் புதிய சாலை அமைக்க வேண்டும் என கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பெரியபாளையம் பிடிஒ அலுவலகத்தில் மனு கொடுத்தோம். ஆனால், இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்கைவில்லை. எனவே, பழுதடைந்த சாலைக்கு பதில் புதிய சாலையை அமைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Tags : Village road ,village , Village road turned into a bomb crater in Dolavedu village: Request to renovate
× RELATED கிராமத்து கோழி ரசம்