×

செங்குன்றம் அருகே சாலையில் திரியும் மாடுகளால் விபத்து: வாகன ஓட்டிகள் அவதி

புழல்: செங்குன்றம் அருகே சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, இதற்கு காரணமாக உள்ள மாட்டின் உரிமையாளர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புழலில் இருந்து செங்குன்றம், சோழவரம், காரனோடை வழியாக சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையும், செங்குன்றம்-திருவள்ளூர் கூட்டுச்சாலையில் இருந்து மாநில நெடுஞ்சாலையும் செல்கிறது. இதில், ஆலமரம் பகுதி காந்தி நகர், பம்மதுகுளம், கலைஞர் கருணாநிதி நகர், அம்பேத்கர் நகர், எடப்பாளையம், அலமாதி வரை உள்ள இரண்டு சாலைகளிலும் மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. மேலும்,  இரவு நேரங்களில் சாலைகளிலேயே படுத்து உறங்குகின்றன.

இதேபோல், புழல் காந்தி பிரதான சாலை, காவாங்கரை, சக்திவேல் நகர், திருநீலகண்ட நகர், கிரான்ட்லைன், தண்டல் கழனி, வடபெரும்பாக்கம், விளாங்காடுபாக்கம், பாலவாயல், சோத்துப்பாக்கம், கும்மனூர் ஆகிய பகுதிகளிலும் மாடுகள் அதிக அளவில் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இப்பகுதிகளில், சாலை விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால், வாகன ஓட்டிகள் மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளாவதும், இருளில் மெதுவாக செல்வதால் வழிப்பறி கொள்ளையர்களிடம் சிக்கி செல்போன், பணம், நகை பறிகொடுப்பதும் வாடிக்கையாக நடக்கிறது. எனவே, தேசிய, மாநில நெடுஞ்சாலை துறையினர் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை சிறைப்பிடித்து, மாட்டின் உரிமையாளர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : road ,Chenkunram ,Motorists , Cattle wander on the road near Chenkunram: Motorists suffer
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி