×

குண்டும் குழியுமான ஓ.எம்.ஆர். சாலை; வாகன ஓட்டிகள் கடும் அவதி: சீரமைக்க வலியுறுத்தல்

திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. முறையான மழை நீர் வடிகால்வாய் வசதி செய்யப்படாததால் பழைய மாமல்லபுரம் சாலையில் மழை நீர் செல்கிறது. இதன் மீது வாகனங்கள் செல்வதால் பழைய மாமல்லபுரம் சாலையில் படூர், ஏகாட்டூர், கழிப்பட்டூர், கேளம்பாக்கம், திருப்போரூர், இள்ளலூர் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தார் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இவற்றில் தண்ணீர் தேங்கி இருப்பதால் சாலையா, பள்ளமா என தெரியாமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் பலரும் அதில் விழுந்து விபத்தை சந்திக்கின்றனர்.

மேலும், இந்த பள்ளங்களில் தேங்கியுள்ள தண்ணீரில் கனரக வாகனங்கள் இறங்கி செல்லும்போது அந்த தண்ணீர் சாலையில் நடந்து செல்வோர் மீது படுகிறது. மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் ஒன்றான ஓ.எம்.ஆர். சாலையை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எட்டிப்பார்க்காத நிலையே உள்ளது. இதனால் சாலைகளில் வாகனங்களை ஒட்டிச்செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். அதே நேரத்தில் தையூர் - கேளம்பாக்கம் இடையே சாலை நன்றாக இருக்கும் இடத்தில் மீண்டும் புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது.

மழையின் காரணமாக சேதமடைந்த சாலைகளை நெடுஞ்சாலைத்துறை பராமரிக்காததால் ஏகாட்டூர் சுங்கச்சாவடி, பெருங்குடி சுங்கச்சாவடி, படூர், கேளம்பாக்கம் ஆகிய இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. ஆகவே, பழைய மாமல்லபுரம் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை தார் மற்றும் ஜல்லிக்கற்கள் கொண்டு நிரப்ப நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தோண்டிய பள்ளங்களை மூடுவதில்லை
திருப்போரூர் பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் நடைபெற்று வருவதால் அதற்கு குழாய் பதிப்பதற்காக ஓ.எம்.ஆர். சாலையில் பல இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு முறையாக மூடப்படாததால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதுகுறித்த பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பியும் நெடுஞ்சாலைத்துறையும், பாதாள சாக்கடை திட்டத்தை மேற்கொள்ளும் கழிவுநீர் அகற்று வாரியமும் பாராமுகமாக உள்ளன.

Tags : Road ,Motorists , Bombshell O.M.R. Road; Motorists suffer: insistence on alignment
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...