×

தனித்தேர்வர்கள் எழுதும் பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை: பத்தாம் வகுப்பு தனித் தேர்வில் பங்கேற்கும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக, அரசுத்தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதை அடுத்து இன்று நடக்க உள்ள தனித்தேர்வர்களின் தேர்வை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. கொரோனா பரவல் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுதேர்வுகளை ரத்து செய்து, மாணவர்கள் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் 21ம் தேதி (இன்று முதல்) முதல் செப்டம்பர் 26 வரை தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது.

இந்தநிலையில், இது சம்பந்தமாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து  செய்து, தனித் தேர்வு எழுதும் அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களும் வெற்றி பெற்றதாக அறிவிக்கக்கோரி திருச்சியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவரின் தந்தை பாலகிருஷ்ணன் சுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தனித் தேர்வராக எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் அவர்களுடைய உதவியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், தனி மனித இடைவெளியை உறுதி செய்ய வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி மனுதாரர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தனிமனித விலகலை பின்பற்றுவது, முகக்கவசம் அணிவது என்பது மாற்றுத்திறனாளி மாணவர்களால் சாத்தியமில்லை. எனவே நாளை (இன்று) நடைபெறும் தனித் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டுமென வாதிட்டார். அப்போது, பள்ளி கல்வித்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் முனுசாமி, நீதிமன்ற உத்தரவுப்படி தனித் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரது உதவியாளர்கள் அனைவருக்கும், அரசு சார்பில் அவர்களது வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பரிசோதனை முடிவில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மாணவர்களின் வசதிக்கேற்ப, அவர்களின் வீடுகளுக்கு அருகிலேயே தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட, நீதிபதிகள் நடைபெற உள்ள மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். மேலும் தனித் தேர்வில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வின் போது சிரமம் ஏற்பட்டால் அது குறித்து தமிழக அரசு மற்றும் மனுதாரர் என இரு தரப்பினரும் 8 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

Tags : cancellation ,Chennai High Court ,Class X ,examination , Chennai High Court denies cancellation of Class X examination written by candidates
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...