×

சிக்கும் அயிரைகள்...தப்பும் விலாங்குகள்; கிஷான் திட்டத்தில் சுருட்டியது எப்படி?...அதிகாரிகள், ஆளுங்கட்சியினர் கூட்டணியின் ஊழல் அம்பலம்

விவசாய நாடு எனச் சொல்லப்படும் இந்தி யாவில் விவசாயிகள் தற்கொலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் தேசிய குற்ற ஆவண காப்பகம் ஒரு அதிர்ச்சிகரமான புள்ளிவிபரத்தை ெவளியிட்டது. 2018ம் ஆண்டில் மட்டும் இந்தியா முழுவதும் 1,34,516 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் 13,896 பேர் என்பது தான் அந்த அதிர்ச்சி. அத்துடன் விவசாயிகள் தற்ெகாலையில் தமிழகம் 2வது இடத்தை பிடித்ததாகவும் அந்த புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

வளர்ச்சித்திட்டங்கள் என்ற பெயரில் பெருமளவு விவசாய நிலங்கள் அழிக்கப்படுவது தான் இதற்கு காரணம். இதற்கெதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் தொடர்ந்து கொண்ேட இருக்கிறது. விவசாய நிலங்களின் பரப்பளவு குறைவதால், விவசாயிகளின் எண்ணிக்கையும் குறைகிறது. தமிழகத்தில் அந்த 5 ஆண்டுகளில்   1,80,000 விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதாவது தமிழகத்தில் 2010-11ம் ஆண்டு  81,18,000 ஆக இருந்த விவசாயிகளின் எண்ணிக்கை 2015-16ம் ஆண்டில் 79,38,000  ஆகக் குறைந்துள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் விவசாயிகள் பிரச்னை தலைவிரித்தாடும் நிலையில் தான்  பிரதமரின்  கனவு திட்டமான கிஷான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மெகா ஊழல் நடந்துள்ளது.

கிஷான் சம்மான் திட்டம் என்றால் என்ன?

கிஷான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தில், மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் 6 ஆயிரம் ரூபாயை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கிறது. தலா 2 ஆயிரம் ரூபாய் என மூன்று தவணைகளில், விவசாயிகள் கணக்கில் இந்தப் பணம் சேர்க்கப்படுகிறது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்காக மத்திய அரசு சார்பில் 32 திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதில் ஒன்று தான் பிரதமரின் கிஷான் சம்மான் நிதி திட்டம். இத்திட்டத்தில், இந்தியா முழுவதும் 19 கோடி விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். தமிழகத்தில்  45 லட்சம் விவசாயிகள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.  இதற்காக 4 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு செலவிட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது?

இந்த திட்டத்தில் 2019ம் ஆண்டு முதல் மத்திய அரசு சார்பில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் ஆண்டுக்கு ரூ.6000 நிதி உதவி வழங்கப்படுகிறது. சுமார் 3 முதல் 5 ஏக்கர் நிலப்பரப்பில் வேளாண்மை செய்து வரும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான குறைந்தபட்ச பொருளாதார உதவிக்காக, நலிவடைந்த விவசாயிகளின் வேளாண்மைக்காக மத்திய அரசு சார்பில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விவசாயிகளின் ஆதார் எண், வங்கி கணக்கு எண், பூமிக்குரிய பட்டா எண், குடும்ப அட்டை எண் மற்றும் தொடர்பு எண் ஆகியவற்றை கிராம நிர்வாக அலுவலரிடம் அளித்து விண்ணப்பிக்க வேண்டும்.

யார் இந்த நிதியைப் பெறலாம்?

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியில்லாதவர்கள் என மத்திய அரசு சில வரையறைகளை வகுத்துள்ளது. அதன்படி, நிறுவனங்களிடம் உள்ள நிலங்களின் உரிமையாளர்கள், விவசாய குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களில் ஒருவருக்கு மேற்பட்டோர், அரசியலமைப்பு பதவி வகித்தவர்கள், வகிப்பவர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் மத்திய, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், மாநில சட்டப்பேரவை மேலவை உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், மத்திய, மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் இணைந்த அலுவலகங்கள், தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரிவோர், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் பணிபுரியும் அலுவலர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், பட்டய கணக்காளர்கள் மற்றும் கட்டடக்கலை நிபுணர்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழில் துறை அமைப்புகளில் பதிவு செய்து துறை தொடர்பான தொழில்களை மேற்கொண்டு இருப்பவர்கள் ஆகியோர் இத்திட்டத்தில் பயனடைய முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த வரையறைகளை மீறி தமிழகத்தில் பிரதமரின் திட்டத்தின் மெகா ஊழல் நடந்துள்ளது.
தமிழகத்தில் தகுதி வாய்ந்த விவசாயிகளை அரசின் உதவித்தொகை சென்றடையாமல், விவசாயிகள் அல்லாதவர்களுக்கும், ஒரே நிலத்தில் விவசாயம் செய்து வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த பலருக்கும், வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.

எப்படி நிதி பெறுவது?

கிஷான் திட்ட ஆவணங்களை ஆன்லைனில் தான் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்காக விவசாயிகளுக்காக அரசு pmkisan.gov.in என்ற இணையதளத்தை துவக்கியுள்ளது. இதில் விவசாயிகள் தங்களை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தங்களுக்கு நிதி வந்துள்ளதா என விவசாயிகள் pmkisan.gov.in சென்று சரிபார்த்துக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் பலன், வழங்கப்பட்ட விவசாயிகளின் பெயர்களையும் மாநில, மாவட்ட வாரியாக, தாலுகா , கிராமத்தின்படி காணலாம். அனைத்து பயனாளிகளின் முழு பட்டியல் அதில் பதிவேற்றப்பட்டுள்ளது.

இதில் விவசாயிகள் தங்கள் ஆதார் எண்,  வங்கி கணக்கு, மொபைல் எண் மூலம் தங்களுக்கு நிதி வந்துள்ளதா என அறிந்து கொள்ளலாம். இதுமட்டுமின்றி  PM-Kisan Helpline: 155261 அல்லது 1800115526 என்ற கட்டணம் இல்லா எண்ணிற்கு அழைத்து விவசாயிகள் தங்கள் நிதி குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம். மேலும், வேளாண் அமைச்சகத்தின் 011-23381092 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம். இத்தனை அறிவிப்புகள் இருந்தும் விஞ்ஞான ரீதியாக தமிழகத்தில் இத்திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது விவசாயிகளை மட்டுமின்றி, மத்திய ஆட்சியாளர்களை அதிர வைத்துள்ளது.

எவ்வளவு பேரை சேர்த்தார்கள்?

தமிழகம் முழுவதும் போலி வங்கிக் கணக்குகளில் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சியில் 90,000, கடலூரில் 76,000, வேலூரில் 20,000, மதுரையில் 11,000, திருப்பத்தூரில் 9,000, ராணிப்பேட்டையில் 6,000 என கிஷான் சம்மான் திட்டத்தில் பயனாளர்களை மோசடியாக சேர்த்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7,792 விவசாயிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5,976 விவசாயிகள் அந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் 1,816 விவசாயிகள் கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை (செப். 9) மோசடி செய்யப்பட்ட ரூ.32 கோடி ரூபாய் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட 34 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை, 80 பேர் பணிநீக்கம், 18 பேர் கைது என சட்டப்பூர்வ நடவடிக்கை நடந்து வருகிறது என வேளாண்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி கூறியுள்ளார்.

தேர்தல் நடவடிக்கை

பிரதமரின் பெயரிலான இந்த திட்டம் மூலம்  நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வாக்குகளைக் குறிவைத்து அதிமுக, பாஜவினர்  ஏராளமானோரை இத்திட்டத்தில் சேர்த்துள்ளனர். ஆனால், அவர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லையென விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன. மேலும் விவசாயிகளுக்காக தொடங்கப்பட்ட பல்வேறு மானியத் திட்டங்களிலும், வேளாண் இயந்திரங்கள் கொள்முதல் திட்டங்களிலும் முறைகேடு நடந்துள்ளதாக புகார் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே கொரோனா ஊரடங்கு காலத்தில், வங்கி கடன் கட்டமுடியால் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள தமிழகத்தில், பிரதமரின் பெயரிலான திட்டத்தில் நடந்த ஊழலில் ஈடுபட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். இதுவரை எத்தனை பேர் பயன்பெற்றுள்ளார்கள் என்ற விபரத்தை தகவலறியும் சட்டத்தின் மூலம் அரசு வெளிப்படுத்த வேண்டும். அப்படி செய்தால் திட்டம் யாரை சென்றடைந்தது என்ற விபரம் அறிய முடியும் என விவசாய சங்கங்கள் மட்டுமின்றி ஊழல் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள சமூகநல ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர்.

எப்படி குட்டு உடைந்தது

தமிழகத்தில் முதன்முதலாக பிரதமர் கிஷான் திட்ட ஊழல் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் ஒன்றியத்தில் உள்ள மல்லிகா கிராமத்தில் தான் கண்டறியப்பட்டது. அங்கு திட்டத்தில் பெண்களைச் சேர்க்க அங்குள்ள அதிமுக, பாஜவினர் 2 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என முன்பணமாக 1000 ஆயிரம் ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து  மே 14ம் தேதி கலெக்டர் கிரண் குராலா, உதவி வேளாண் அலுவலரிடம் விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கட்சி  மாவட்ட செயலாளர் ஏழுமலை எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் காரைக்காடு பகுதியில் உள்ள பிள்ளையார்மேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் மகன், கிஷான் திட்டத்தில் நூறு நாள் வேலை திட்டத்தில் உள்ளவர்களின் பட்டியலை இணைத்துள்ளார். இதுகுறித்து கடலூர் மாவட்ட கலெக்டரிடம், விவசாய சங்க மாவட்ட செயலாளர் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். இதன் பின் தான் வேளாண்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி இப்பிரச்னை குறித்து விசாரிக்க உத்தரவிட்டார். விவசாயிகளின் வளர்ச்சிக்கான திட்டத்தில் நடைபெற்ற ஊழல் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் செப். 1ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Tags : eagles ,Kishan ,coalition ,party , Trapped eagles ... escaping eels; How did Kishan roll in the project? ... Officials, the ruling party exposed the corruption of the coalition
× RELATED கழுகுகள் பாதுகாப்பு மையம் அமைக்க...