×

மஞ்சங்காரணை கிராமத்தில் சேதமடைந்து கிடக்கும் பயணியர் நிழற்குடை: சீரமைக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே மஞ்சங்காரணை கிராமத்தில் விவசாயிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் மாணவ - மாணவிகள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் மஞ்சங்காரணை, கூரம்பாக்கம், காடாநல்லூர் என 10 மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வேலை சம்மந்தமாகவும், பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல மஞ்சங்காரணை  பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு வந்து அங்கிருந்து பெரியபாளையம், திருவள்ளூர், ஆவடி, பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி ஆகிய பகுதிகளுக்கு பஸ் மூலம் செல்கின்றனர்.

அவ்வாறு செல்லும் பயணிகளுக்கு  பஸ் நிலையமோ, பயணியர் நிழற்குடையோ இல்லை. இதனால் பயணிகள் வெட்ட வெளியில் கொளுத்தும் வெயில் மற்றும் கொட்டும் மழையில் நிற்கும் நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த 2016-2017ம் ஆண்டு ₹5 லட்சம் செலவில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த பயணியர் நிழற்குடையில் உள்ள இரும்பு  சேர்கள் உடைந்து சேதம் ஏற்பட்டு அதன் தகடுகள் பயணிகளை பதம் பார்க்கிறது. பஸ் நிறுத்த மேற்கூரையின் மீதும் மற்றும் அதை சுற்றியும் செடி கொடிகள் படர்ந்துள்ளது.

மேலும், கும்மிடிப்பூண்டி தொகுதி எம்எல்ஏவின் சொந்த கிராமம் மஞ்சங்காரணை என்பதாலும் அவரை பார்க்க வரும் கட்சியினரும், பொதுமக்களும் இந்த பஸ் நிறுத்தத்தில் இறங்கி தான் அவரது வீட்டிற்கு செல்வார்கள். எனவே மஞ்சங்காரணை  பகுதியில் பயணிகளின்  வசதிக்காக பயணியர் நிழற்குடையை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைத்து  தர வேண்டும் என  அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : traveler ,village ,Manjankarana , Damaged traveler's umbrella in Manjankarana village: Request to renovate
× RELATED பெரியஇலை கிராமத்தில் நிழற்குடை அமைக்க கோரிக்கை