புதிய கல்விக்கொள்கை 21ம் நூற்றாண்டின் தேவை: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேச்சு

புதுடெல்லி: ‘மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, 21ம் நூற்றாண்டின் தேவைக்கேற்ப கல்வித்துறையை மாற்றி அமைத்துள்ளது,’ என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள ‘புதிய கல்விக் கொள்கை - 2020’க்கு எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருப்பினும், இதை அமல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. எனவே, இந்த கல்விக் கொள்கை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும், இக்கல்விக் கொள்கை பற்றிய விவாதங்களை மத்திய கல்வி அமைச்சகம் நடத்தி வருகிறது. ‘உயர்கல்வியில் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துதல்’ என்ற கருத்தரங்கம் நேற்று நடத்தப்பட்டது.

இதில், காணொலி காட்சி மூலமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு பேசியதாவது: புதிய கல்விக் கொள்கையை ‘21ம் நூற்றாண்டின் தேவைக்கேற்ப மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது. சமத்துவமும், துடிப்புமிக்க அறிவாற்றல் கொண்ட சமூகம் இதனால் உருவாகும்.  மாணவர்களின் படைப்பாற்றலும், பகுத்தாயும் திறனும் அதிகரிக்கும். தர்க்க ரீதியான சிந்தனையும், முடிவெடுக்கும் வல்லமையும் மேம்படும். தக்க்ஷசீலா, நாளந்தா போன்ற இந்தியாவின் தொன்மையான கல்விநிலையங்கள் உலக அரங்கில் மிகப்பெரும் மரியாதையை நமக்குப் பெற்றுத் தந்தன. புதிய கல்விக் கொள்கையால் அந்தப் பாரம்பரியப் பெருமை மீண்டும் நிலைநிறுத்தப்படும்.

ஆசிரியர்களுக்கான பிஎட் கல்வி, தொழிற்கல்விகள், தொலைதூரக் கல்விகள் போன்றவற்றை கண்காணிக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. மாணவர்களின் கல்வித் திறன்களை டிஜிட்டல் முறையில் பதிவு செய்து, பராமரிக்கவும் புதிய கல்விக்கொள்கை வாய்ப்பு வழங்கியுள்ளது. தேசிய அளவிலும், தொழிற்கல்விகளிலும் மாணவிகளின் பங்கு குறைவாக இருக்கிறது. இந்தக் குறைபாட்டையும் இந்த திட்டத்தின் மூலம் சரி செய்ய எல்லோரும் முயல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>