×

தலைவர்களின் மோதலுக்கு காரணம் என்ன?.. ஜாதி ரீதியாக செயல்படும் அதிமுக தலைவர்கள்: தொண்டர்கள் கடும் அதிருப்தி

சென்னை: அதிமுகவில் சமீப காலமாக ஜாதி ரீதியான அரசியல் தலைதூக்கி வருவதால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, அதிமுக அவசர உயர்நிலை ஆலோசனை கூட்டம் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டம், அதிமுக கூட்டணி கட்சிகளின் நெருக்கடியை சமாளிப்பது, சசிகலா விடுதலையானால் ஏற்படும் அரசியல் பிரச்னைகளை எப்படி கையாள்வது என்பது குறித்து விவாதிப்பதற்காக முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால், கூட்டத்தில் பேசிய பல தலைவர்களும் அதிமுக உட்கட்சி மோதல் குறித்தே பேசினர்.

ஒரு கட்டத்தில் ஆவேசம் அடைந்த அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது, அருகில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இப்போது அதற்கு அவசியம் இல்லை என்று கூறி ஓபிஎஸ் கருத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. முதல்வர் - துணை முதல்வர் நேரடி மோதல் காரணமாக, அங்கு கூடி இருந்த அமைச்சர்களும் அமைதியாக உட்கார்ந்து விட்டனர். வழக்கமாக, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், காமராஜ் உள்ளிட்டவர்கள் ஓபிஎஸ் கருத்துக்கு பதில் சொல்லவில்லை.

காரணம், இது ஜாதி ரீதியாக இந்த அமைச்சர்கள் அனைவரும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோன்று முதலில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களாக இருந்த நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் ஆகியோர் இடையில் முதல்வர் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். வைத்திலிங்கத்துக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்காததற்கு, ஓ.பன்னீர்செல்வம்தான் காரணம் என்று கூறப்பட்டது. இதனால் அவரிடம் இருந்து விலகியே இருந்தார். ஆனால், நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் இந்த இரண்டு பேரும் எடப்பாடிக்கு நேரடியாக ஆதரவு தெரிவிக்காமல் ஓ.பன்னீர்செல்வத்துக்கே ஆதரவு தெரிவித்தனர்.

அதேபோன்று, கொங்கு மண்டலத்தில் உள்ள அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தொடர்ந்து எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய, தங்கமணி, அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை விரைவில் அறிவிக்க வேண்டும். அப்போதுதான் தேர்தல் களத்தில் பொதுமக்களை சந்திக்க முடியும் என்றார். இவர், மறைமுகமாக எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பதையே சுட்டிக்காட்டினார். சில மாதங்களாக எடப்பாடிக்கு எதிராக இருந்த தங்கமணி திடீரென அவருக்கு ஆதரவாக செயல்பட தொடங்கியுள்ளார்.

அதாவது, மின்சார வாரியத்தில் டெண்டர் விடும் விஷயத்தில் ஐஏஎஸ் அதிகாரி விக்ரம் கபூருக்கும் அமைச்சர் தங்கமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. முதல்வர் ஆதரவுடன் விக்ரம்கபூர் செயல்பட்டார். அதேபோன்று, ஊரடங்கு நேரத்தில், டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டும் என்று, சாராய தொழில் அதிபர்கள் முதல்வரை சந்தித்தனர். இந்த சந்திப்பு அமைச்சர் தங்கமணிக்கு தெரியாமல் நடந்தது. இதனால் தங்கமணி கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியே இருந்தார். இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் முதல்வர் எடப்பாடி அமைச்சர் தங்கமணியை அழைத்து சமாதானம் பேசினார். இதன் காரணமாகவே தங்கமணி, முதல்வர் எடப்பாடிக்கு ஆதரவாக செயல்பட்டதாகவே கூறப்படுகிறது.

அமைச்சர் செங்கோட்டையனும் அதிமுக உயர்மட்ட கூட்டத்தில் எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாகவே இருந்தார். இதன்மூலம் கவுண்டர் அமைச்சர்கள் அனைவருக்கும் முதல்வர் எடப்பாடிக்கு ஆதரவாக செயல்பட தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்து, வடமாவட்டங்களை சேர்ந்த அமைச்சர் சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி எம்பி, செம்மலை எம்எல்ஏ உள்ளிட்ட வன்னியர் சமூகத்தை ேசர்ந்தவர்கள் நேற்று முன்தினம் அமைதியாக இருந்தனர். சி.வி.சண்முகம், எப்போதும் முதல்வர் எடப்பாடிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். கே.பி.முனுசாமி மற்றும் செம்மலை ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருந்தனர்.

சி.வி.சண்முகம், விழுப்புரம் மாவட்டத்தில் லட்சுமணனுக்கு கட்சியில் பதவி கொடுக்க எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு முதல்வர் ஆதரவு தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வம் லட்சுமணனுக்கு பதவி கொடுக்க வேண்டும் என்றார். இதனால் விழுப்புரம் மாவட்டம் பிரிக்கப்படாமல் இருந்தது. அதன்பின்னர் சி.வி.சண்முகம், ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து, லட்சுமணன் விவகாரத்தில் நீங்கள் அமைதியாக இருந்தால், நான் எடப்பாடி அணியில் இருந்து விலகி நடுநிலை வகிப்பதாக தெரிவித்தார். இதனால் தனது ஆதரவாளரான லட்சுமணனை கைகழுவினார் ஓ.பன்னீர்செல்வம். இதனால்தான், லட்சுமணன் அதிமுகவில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்தார்.

இதனால் சி.வி.சண்முகம் அதிமுக கூட்டத்தில் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அதேபோன்று, ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளரான கே.பி.முனுசாமி, செம்மலை உள்ளிட்டவர்களும் இடையே எடப்பாடிக்கு ஆதரவாக இருந்தனர். ஆனால் நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் அவர்களும் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. தென் மாவட்டங்களில் தேவர் சமூகத்துக்கு எதிரான மனநிலை கொண்ட தேவேந்திரர்கள், நாடார்கள் எப்போதும் அதிமுகவுக்கு எதிரான மனநிலையில் இருப்பார்கள். கட்சியில் இருக்கும் தலைவர்களும் மறைமுகமாக சசிகலாவுக்கு எதிரான மனநிலையில்தான் இருப்பார்கள்.

ஆனால், அமைச்சரவை கூட்டத்தில் 7 பிரிவாக உள்ள தேவேந்திரகுல வேளாளர்களை ஒரே பிரிவாக இணைத்து அறிவிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அதற்கு திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார் உள்ளிட்ட தேவர் சமூக அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் தேவேந்திர குல வேளாளர்கள் என ஆணை பிறப்பிக்க கொங்கு மண்டல அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் எதிராக இருக்கும் தேவர் சமூக அமைச்சர்கள், தேவேந்திர குலவேளாளர் விவகாரத்தில் ஆதரவு தெரிவித்து நின்றதால், அந்த எம்எல்ஏக்கள் அனைவரும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக திரண்டுள்ளனர். மேலும் நாடார் சமூக எம்எல்ஏக்களும் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனால் தென் மாவட்டங்களில் பெரும்பான்மையான சமூக தலைவர்கள் ஓரணியில் திரண்டு நிற்பது கொங்கு அமைச்சர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் அதிமுகவில் தற்போது ஜாதி ரீதியாக அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் செயல்படுவதை உறுதிபடுத்தியுள்ளது. இதனால் அதிமுக தொண்டர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்களை ஊக்குவித்தால், சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில், அதிமுகவில் மாவட்டத்துக்கு மாவட்டம் ஜாதி தலைவர்களின் கைகளே ஓங்கும் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.



Tags : clash ,leaders , What is the reason for the clash of leaders?
× RELATED நுங்கம்பாக்கம் செயல் வீரர்கள்...