×

நாடு முழுவதும் கடும் எதிர்ப்பை சந்தித்து வரும் வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் இன்று தாக்கல்: அதிமுக ஆதரவளிப்பதால் நிறைவேற வாய்ப்பு

புதுடெல்லி: மக்களவையில் கடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்டு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பை சந்தித்து வரும் வேளாண் மசோதாக்கள் இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளன. மத்தியில் ஆளும் பாஜ கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக இந்த மசோதாக்களுக்கு ஆதரவளிப்பதால், இவை மாநிலங்களவையில் நிறைவேற அதிக வாய்ப்புகள் உள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 14ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. இதில் 11 மசோதாக்களை நிறைவேற்ற ஆளும் பாஜ அரசு திட்டமிட்டிருந்தது. இதில் வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவை முதல் நாளே தாக்கல் செய்யப்பட்டது.

இவற்றில் இரண்டு மசோதாக்கள் கடந்த 17ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. பாஜ கூட்டணியில் நீண்ட காலமாக இடம் பெற்றுள்ள சிரோமணி அகாலி தளம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இக்கட்சி சார்பில் மத்திய அமைச்சராக இருந்த உணவு பதனிடும் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால், பாஜ கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரம், அமைச்சர் பதவியை மட்டும் ராஜினாமா செய்து விட்டு, பாஜ கூட்டணிக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம் என்று சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் சுக்பீர் சிங் கூறியுள்ளார். இது, ‘சுத்தமான ஏமாற்று வேலை.,’ என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார். வேளாண் மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பஞ்சாப், அரியானா மாநிலங்களில் போராட்டம் வலுத்துள்ளது. பஞ்சாபில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் வரும் 25ம் தேதி பஞ்சாப் பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. ஆனால், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விவசாயிகளை திசை திருப்பி வருவதாக பாஜ குற்றம்சாட்டி வருகிறது. இதனிடையே, மழைக்கால கூட்ட தொடருக்கு வருகை தரும் எம்பி.க்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவதால், அவர்களின் நலன் கருதி, மக்களவை கூட்டத் தொடரை முன்கூட்டியே, அதாவது வரும் புதன்கிழமையுடன் முடித்து கொள்ள, மக்களவை அலுவல் ஆய்வு கூட்டத்தில் நேற்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதே முடிவு, மாநிலங்களவையில் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் கடும் எதிர்ப்பை சந்தித்து வரும் வேளாண் மசோதாக்கள் இன்று  மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளன. குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது. இந்த மசோதாக்களுக்கு பாஜ கூட்டணியி–்ல் இடம் பெற்றுள்ள மேலும் சில கட்சிகளும், வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, மசோதாக்களை எதிர்த்து வாக்களிக்கும்படி தனது கட்சி எம்பி.க்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அதே நேரம், மசோதாக்களுக்கு அதிமுக ஆதரவு அளிப்பதால், மாநிலங்களவையிலும் இவை அதிக சிக்கலின்றி நிறைவேறுவது உறுதியாகி இருக்கிறது.Tags : AIADMK ,country ,state assembly , Agriculture bills, which are facing strong opposition across the country, will be tabled in the state assembly today: AIADMK support is likely to pass
× RELATED பாஜகவிடம் அதிமுகவை பகிரங்கமாக அடகு வைத்துவிட்டதாக கோபண்ணா விமர்சனம்