×

எனக்கு கொரோனா... தேடாதே... மனைவியை ஏமாற்றி காதலியுடன் உல்லாசம்: போலீசிடம் வசமாக சிக்கிய மன்மத கணவன்

இது, மகாராஷ்டிரா மாநிலம், நவிமும்பையில் நடந்த சம்பவம். அவர் பெயர் மன்மதன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 28. இவருடைய மனைவியும் நல்ல அழகிதான். இருந்தாலும், இருவருக்கும் ஏழாம் பொருத்தம். எப்போது பார்த்தாலும் சண்டை, சச்சரவு. காரணம், மன்மதன் பூவுக்கு பூ தாவும் ரகம். சமீபத்தில் தனது மனைவிக்கு மன்மதன் திடீரென போன் செய்தார். ‘பரிசோதனையில் எனக்கு கொரோனா உறுதியாகி விட்டது. நான் இறந்து விடுவேன்... தேடாதே...,’ என கூறி, பட்டென்று இணைப்பை துண்டித்தார்.என்னதான் சண்டைக்கார கணவனாக இருந்தாலும், மனைவி கண் கலங்கினார். என்ன செய்வது என்று தெரியாமல் தனது சகோதரரிடம் விவரத்தை கூறினார்.

இருவரும் சேர்ந்து, மன்மதன் எந்த இடத்தில் சிகிச்சை பெறுகிறார் என்பதை அறிய முயன்றனர். முடியவில்லை. பின்னர், கடந்த ஜூலை 24ம் தேதி போலீசிடம் புகார் அளித்தனர். இதை விசாரித்த காவல் துறை அதிகாரியின் பெயர் வினாயக் வாட்ஸ். உடனே, அவர் விசாரணையில் இறங்கினார். பல நாட்களானது. வாரங்களானது. மன்மதனை தேடிய போலீஸ் படை துவண்டது. இந்நிலையில்தான், சில நாட்களுக்கு முன் வாசி பகுதியில் ஒரு பைக் கேட்பாரின்றி பல நாட்களாக நிற்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் உடனே அந்த வாகனத்தை கைப்பற்றினர். அந்த பைக்கில் ஹெல்மெட், பை மற்றும் சில சாவிகளும் இருந்தன. விசாரணையில், அது மன்மதனின் பைக் என்பது உறுதியானது.

ஒரு துப்பு கிடைத்ததும் வினாயக், மகிழ்ச்சி அடைந்தார். பைக் நின்ற இடத்தை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தார். ஆனால், எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால், ஆட்கடத்தல், கொள்ளை அல்லது விரோதிகளால் கொலை போன்ற சிக்கலில் மன்மதன் சிக்கி இருப்பாரோ என்ற கோணத்தில் விசாரணை திரும்பியது. இந்நிலையில், மன்மதன் மாயமான இரவு, காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு நபர்2 முறை பேசியது தெரியவந்தது. அவர் பயன்படுத்திய செல்போன் எண்ணை தேடியபோது, அது மத்திய பிரதேச மாநிலம், இந்தூரை காட்டியது. உடனே, போலீஸ் படை அங்கு விரைந்தது.

அங்கு, அந்த மன்மதன் வேறொரு பெண்ணுடன் குடும்ப நடத்திக் கொண்டிருப்பதை கண்டு, போலீசார் அதிர்ந்தனர். அவரை கடந்த 15ம் தேதி மும்பபைக்கு அழைத்து வந்தனர். அங்கு ‘முறைப்படி’ நடத்தப்பட்ட விசாரணையில், தான் கொரோனாவால் இறந்து விட்டது போன்ற நாடகத்தை அரங்கேற்றி விட்டு, காதலியுடன் உல்லாச வாழ சென்றதாக தெரிவித்தார். இதை கேட்டு மனைவியும், போலீசாரும் அதிர்ந்தனர். இதுபோல், வேறு பெண்களிடமும் அவர் தொடர்பு வைத்திருக்கிறாரா என போலீசார் துருவ ஆரம்பித்து விட்டனர். மன்மதன் இப்போது போலீஸ் பிடியில் கரும்பை போல் கசங்கிக் கொண்டிருக்கிறார்.

Tags : Cupid , I don't have a corona ... don't look ... cheating on my wife and having fun with my girlfriend: Cupid's husband caught by the police
× RELATED புத்திர தோஷம் நீக்கும் திருத்தலம்