×

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைக்கு பக்தர்களுக்கு அனுமதி: திருவிதாங்கூர் தேவசம் போர்டு பரிந்துரை

திருவனந்தபுரம்: ‘சபரிமலையில் மண்டல காலத்துக்கு முன்னோடியாக ஐப்பசி மாத பூஜைகளில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும்,’ என கேரள அரசிடம் திருவிதாங்கூர் தேவசம்போர்டு பரிந்துரைத்துள்ளது. ெகாரோனா  பரவலை தொடர்ந்து கடந்த மார்ச் முதல் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், ஒவ்வொரு மாதமும் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடந்து வருகின்றன. கடந்த மாதம் ஓண பூஜை, ஓண சத்யா போன்றவை பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால், நாடு முழுவதும் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.

சபரிமலை ஐயப்பன் கோயிலிலும் பக்தர்களை அனுமதிக்கலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், சபரிமலையில் மண்டல காலம் முதல் பக்தர்களை அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டது. என்றாலும், முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் இம்மாத இறுதியில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அமைச்சர் அப்போது தெரிவித்தார். இந்நிலையில், திருவிதாங்கூர்  தேவசம்போர்டு சார்பில் அரசுக்கு அளித்துள்ள பரிந்துரையில், ‘மண்டல காலம் தொடங்கும் நவம்பர் மாதம் முதல் சபரிமலையில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும்.

முழுக்க முழுக்க ஆன்-லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும். முன்பதிவு செய்யும்போது கொரோனா நெகட்டிவ் சான்றிதழையும் தாக்கல் செய்ய வேண்டும். மண்டல காலத்துக்கு முன்னோடியாக,  சோதனை அடிப்படையில் ஐப்பசி மாத பூஜைகளின்போது (அக்டோபர் 16 முதல் 21 வரை) பக்தர்களை அனுமதிக்கலாம்,’ என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக வரும் 28ம் தேதி முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.

தினமும் 5 ஆயிரம் பேர்
திருவிதாங்கூர் தேவசம் போர்டு தனது பரிந்துரையில் மேலும் கூறியுள்ள விவரம்:
* வெளிமாநிலங்களை  சேர்ந்தவர்கள்  பல நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்வதால், அவர்களுக்கு  நிலக்கல்லில்  பரிசோதனை நடத்த வேண்டும்.
* நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 5,000  பேருக்கு  மட்டுமே அனுமதி வழங்க வேண்டும்.


Tags : Devotees ,Iyengar ,Sabarimala Iyappan Temple ,Travancore Devasam Board , Devotees allowed to perform Iyengar month puja at Sabarimala Iyappan Temple: Travancore Devasam Board recommendation
× RELATED சபரிமலையில் பூஜை நேரங்களில் பக்தர்களுக்கு அனுமதியில்லை