×

கோவிட் சாதனையாளர் விருதுகள்: முதல்வர் எடப்பாடி வழங்கினார்

சென்னை: உலகளாவிய செல்வாக்கு பெற்ற நபர், சகிப்புத்தன்மை, கோவிட் சாதனையாளர் உள்ளிட்ட விருதுகளை முதல்வர் எடப்பாடி வழங்கினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை தலைமை செயலகத்தில், தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பால் செப்டம்பர் 15 முதல் 19ம் தேதி வரை வீடியோ கான்பரன்சிங் வாயிலாக நடத்தப்பட்டு வரும் ‘CONNECT 2020’ மாநாட்டில் பங்கேற்று, தமிழ்நாடு இணைய பாதுகாப்பு கொள்கை 2020, தமிழ்நாடு நம்பிக்கை இணைய கொள்கை 2020 மற்றும் தமிழ்நாடு பாதுகாப்பு மற்றும் நெறிமுறை சார்ந்த செயற்கை நுண்ணறிவு கொள்கை 2020 ஆகியவற்றை வெளியிட்டார்.

இதன்மூலம், மாநிலத்தில் இணைய பாதுகாப்பினை உறுதி செய்வதுடன், பாதுகாப்பு  மீறல்களை தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் வழிவகுக்கும். இதைத்தொடர்ந்து மாநாட்டில், இந்த ஆண்டிற்கான சிறந்த தொழில் முனைவோருக்கான விருதினை சென்னை - கான்ஸ்யூமெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கே.எல்.என்.சாய் பிரசாந்த், தனியார் துறையில் சிறந்த வகையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதற்கான விருதினை லார்சன் அண்டு ட்யூப்ரோ லிமிடெட் - ஸ்மார்ட் வேர்ல்ட் அண்டு கம்யூனிகேசன் பிசினஸ் நிறுவனத்தின் நிர்வாக துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன்,

பொதுத்துறையில் சிறந்த வகையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதற்கான விருதினை பதிவுத்துறை தலைவர் ஜோதி நிர்மலா, உலகளாவிய செல்வாக்கு பெற்ற நபருக்கான விருதினை ப்ரஷ் ஒர்க்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் கிரீஷ் மாத்ருபூதம், சமூகத் தொழில்முனைவோருக்கான விருதினை கோவை - பர்பிள் அயர்னிங் நிறுவனத்தின் இயக்குநர் அமானுல்லா, ஊக்குவித்திடும் வகையிலான முன்மாதிரி நபருக்கான விருதினை இந்த்ரி ஆக்சஸ் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ராமநாதன்,

கோவிட் சாதனையாளருக்கான விருதினை ஹெலிக்சான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விஜய் சங்கர் ராஜா, சகிப்புத் தன்மைக்கான விருதினை கோவை - சி.ஜி.வேக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுரேஷ், வழிகாட்டியாளர் விருதினை ப்யூச்சர் போக்கஸ் இன்போடெக் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் எம்.வி.சுப்பிரமணியன் ஆகியோருக்கு வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags : Edappadi , Govt Achievement Awards: Presented by Chief Minister Edappadi
× RELATED எடப்பாடி தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம்