×

வேளாண் மசோதாக்களை கண்டித்து சென்னையில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது. இதில் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதாக்களை கண்டித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா என 3 மசோதாக்கள் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் பதவியில் இருந்து விலகினார்.

இந்த மசோதாக்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். குறிப்பாக, பஞ்சாப், அரியானா மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், மத்திய அரசின் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 25ம் தேதி பாரத் பந்த் நடத்தப்படும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இந்த மசோதாக்கள் விவசாயிகளின் முதுகெலும்பை ஒடிக்கும் சட்டம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதேபோல காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், எஸ்.டி.பி.ஐ. கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் விவசாயிகளுக்கு விரோதமாக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள 3 சட்டங்கள் குறித்து விவாதிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 21ம் தேதி (நாளை) காலை 10.30 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில், “அனைத்துக் கட்சிக் கூட்டம்” நடைபெறும். விவசாயிகளுக்கு விரோதமாக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று சட்டங்கள்-குறித்து விவாதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள மசோதாவை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடத்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் வருகிற 25ம் தேதி நடைபெறும் “பாரத் பந்த்” போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Tags : party meeting ,Chennai ,Consultation ,MK Stalin , All party meeting in Chennai tomorrow to condemn agricultural bills: Consultation led by MK Stalin
× RELATED அனைத்து கட்சி கூட்டம்