கொரோனா நோயாளிகள் அதிகரிப்பு; மும்பையில் அவசர சிகிச்சை பிரிவு படுக்கை, வென்டிலேட்டர் பற்றாக்குறை: சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

மும்பை: மும்பையில் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில் அவசர சிகிச்சை பிரிவுடன் கூடிய படுக்கை வசதி, வென்டிலேட்டர் பற்றாக்குறை நிலவுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மும்பையில் நேற்று முன்தினம் நிலவரப்படி ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 385 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். நேற்று முன்தினம் மட்டும் 2411 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த சில தினங்களாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மும்பையில் அதிகரித்தபடி உள்ளது. கடந்த 15ம் தேதி முதல் மேலும் 27 சிறிய தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

இதையும் தாண்டி தற்போது ஐசியு படுக்கைகள் மற்றும் வென்டிலேட்டர்கள் பற்றாக்குறை நிலவுவதாக கவுன்சிலர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக பிரசாந்த் சோனி (31) என்ற இளைஞர் கூறியதாவது: எனது தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மலாடில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தோம். ஆனால் இன்னும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அந்த மருத்துவமனைக்கு அனுமதி கிடைக்கவில்லை. எனது தந்தை அங்கு ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆக்சிஜன் அளவு பற்றாக்குறையாக இருப்பதால் வேறு மருத்துவமனைக்கு மாற்ற முடிவு செய்துள்ளோம். ஆனாலும் எங்கும் படுக்கை வசதி கிடைக்காததால் கடும் அவதியடைந்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆனாலும் கடந்த 16ம் தேதி நிலவரப்படி 153 ஐசியு படுக்கைகள், 63 வென்டிலேட்டர்கள் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதி மருத்துவமனைகளில் காலியாக இருப்பதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி கவுன்சிலர் ஒருவர் கூறியதாவது: கொரோனா பாதித்த சீரியசான நிலையில் உள்ள நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் அங்கிருந்து நோயாளிகளை துரத்தி அடிக்கின்றனர். பாஜ கவுன்சிலர் விநோத் மிஸ்ரா கூறுகையில் `கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால் எனது வார்டில்   கூடுதல் படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகளை திறக்க வேண்டும்’ என்றார்.

Related Stories:

>