×

வாலாங்குளம் கரையில் ‘ஸ்மார்ட்சிட்டி’ வளர்ச்சி பணி குளக்கரை ஆக்கிரமிப்பைவிட்டு அகல மறுக்கும் வீடுகள்: மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனம்

கோவை: கோவை வாலாங்குளம் 160 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இக்குளத்தின் வடக்கு கரையோர பகுதி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வந்தது. இங்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் முளைத்தன. நீர்வழிப்பாதை மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என ெசன்னை ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து, கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் இங்குள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன. சுமார் 752 ஓட்டு வீடு மற்றும் குடிசை வீடுகளை மாநகராட்சி நிர்வாகம் இடித்து அகற்றியது. அத்துடன், மாற்று ஏற்பாடாக இப்பகுதி மக்களுக்கு புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடி வீடுகள் ஒதுக்கப்பட்டன. தற்போது, இக்குளக்கரை முழுவதும் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின்கீழ் அழகுப்படுத்தப்பட்டு வருகிறது.

நடைபாதை, சைக்கிள் டிராக், பூங்கா, குளத்தின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தீவுத்திடல்  வரை தனிப்பாதை, குளத்திற்குள் செல்லும் கழிவுநீரை தடுத்து சுத்திகரிப்பு செய்தல், குளக்கரையில் படித்துறை அமைப்பது என பல்வேறு திட்டப்பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இக்குளக்கரையில், வடக்கு பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் மறைந்து, தற்போது மாநகராட்சி சார்பில் மேம்பாட்டு பணி நடந்து வரும் வேளையில், இன்னும் சில வீடுகள் காலி செய்யப்படாமல் உள்ளன. குறிப்பாக, இங்குள்ள 73வது வார்டுக்கு உட்பட்ட நாடார் காலனி பின்புறம் இருவீடுகள் குளக்கரையை ஆக்கிரமிப்பு செய்தபடி உள்ளன. இவற்றுக்கு மின்வாரியம் சார்பில், மின் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. அரசின் தடையை மீறி இரு குடும்பங்கள் இங்கு குடியிருக்கின்றன. முக்கியமாக, திருச்சி ரோட்டில் உள்ள ஒரு தனியார் டிபார்ட்மென்டல் ஸ்டோர் பின்புறம் நாடார் காலனியில் இருந்து இக்குளக்கரைக்கு இரு மார்க்கமாக, இரண்டு 30 அடி சாலை செல்கிறது. இவ்விரு சாலைகளும் ஆக்கிரமிக்கப்பட்டு, காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டுள்ளன.

குளத்தை ஆக்கிரமிப்பு செய்ததுடன், அரசால் அங்கீகரிக்கப்பட்டு பொது பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ள சாலையையும் ஆக்கிரமித்துள்ளது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த ஆக்கிரமிப்பு காரணமாக, இப்பகுதியில் ஸ்மார்ட்சிட்டி திட்டப்பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. சுமார் 800 வீடுகளை அகற்றிய மாநகராட்சி நிர்வாகம், இந்த வீடுகளை மட்டும் அகற்றாமல் விட்டுவைத்துள்ளது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இது பற்றி மாநகராட்சி மத்திய மண்டல அதிகாரிகள் கூறுகையில், ‘’குளக்கரை ஆக்கிரமிப்பு அளவீடு செய்யப்பட்டு, சுவற்றில் குறியீடு ெசய்யப்பட்டுள்ளது. தாமாக முன்வந்து அகற்ற, கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. கால அவகாசம் முடிவதற்குள் அகற்றாவிட்டால் மாநகராட்சி சார்பில் அதிரடியாக அகற்றப்படும்’’ என்றனர்.Tags : Smart City ,banks , 'Smart City' development work on Valangulam shore
× RELATED ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்