பிறக்கும்போதே உள்நாக்கு அடைத்து விட்டதால் 19 வருடங்களாக பவுடர் பாலை குடித்து உயிர் வாழும் சிறுவன்; தமிழக அரசு உதவியை எதிர்பார்ப்பு

மன்னார்குடி: பிறவியிலேயே உள்நாக்கு அடைத்து விட்டதால் 19 வருடங்களாக பவுடர்பாலை மட்டுமே குடித்து உயிர்வாழ்ந்து வரும் சிறுவனுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்று அவரது தந்தை கோரிக்கை விடுத்துள்ளார். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே லெட்சுமாங்குடி மேலத் தெருவை சேர்ந்தவர் விவசாய கண்ணன் (51), விவசாய கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி தங்கச்செல்வி. இவர்களுக்கு பாக்கியலட்சுமி (27), கயல்விழி (22), கன்னிகா (11) ஆகிய மூன்று மகள்களும், கலையரசன் (19), கலைவாணன் (17) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். தங்கச்செல்வி மஞ்சட்காமாலை நோயால் இறந்து விட்டார். கலையரசன் பிறக்கும் போதே மூக்கு மற்றும் உதடு பகுதிகள் மூடிய படியே பிறந்ததால் தாய்ப்பால் சிரமப்பட்டே குடித்து வந்துள்ளான். வளந்து நீண்ட வருடங்கள் ஆன பிறகும் கலையரசனால் பேச முடியவில்லை. சிறுவனின் தாயார் தங்கச்செல்வி இறந்து விட்டதால் குடும்பம் வறுமை காரணமாக கண்ணன் தனது நான்கு குழந்தைகளையும் சிரமத்தோடு வளர்த்து வந்தார்.

இந்நிலையில், சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கலையரசனுக்கு அறுவை சிகிச்சை மூலம் உதடு மற்றும் மூக்கு சீரமைக்கப்பட்டதால் கலையரசனுக்கு பேச்சுதிறன் வந்து சரளமாக பேச ஆரம்பித்தார். மேலும், கலையரசன் பிறக்கும் போதே உள்நாக்கு அடைத்து விட்டதால் எந்தவிதமான திட உணவும் உட்கொள்ள முடியாமல் திரவ உணவான பால் மட்டுமே குடித்து வளர்ந்து வந்தான். பத்தொன்பது வயதாகியும் கலையரசன் இன்று வரை பவுடர் பால் மட்டுமே குடித்து வருகிறான். இதுகுறித்து கலையரசனின் தந்தை கண்ணன் கூறுகையில், கலையரசனின் உள்நாக்கு அடைத்து விட்டதால் சிறு வயது முதல் பவுடர் பாலை மட்டும் குடித்து வருகிறான். நாளொன்றுக்கு 6 அல்லது 7 முறை பாலை மட்டுமே குடிக்கிறான். இருப்பினும், இதுவரை அவனுக்கு காய்ச்சலோ அல்லது வேறு எந்தவிதமான நோயும் தாக்கவில்லை.

சில நேரங்களில் பவுடர்பால் வாங்குவதற்கு பணம் இல்லாத சூழலில் பசும்பால் வாங்கி கொடுத்தால் அவன் குடிக்க மறுக்கிறான். மேலும் வயதுக்குரிய போதிய உடல் வளர்ச்சி இல்லாததால் அவனுடைய எதிர்காலம் குறித்து மிகவும் கவலையுடன் இருக்கிறோம். கூலி வேலை பார்த்து அதன் மூலம் சொற்ப வருமானத்தில் 1 பவுடர் பால் வாங்கினால் அது இரண்டு நாட்களுக்கு மட்டுமே வருகிறது. கொரோனா காலத்தில் போதிய வருமானமின்றி வேதனையில் உள்ளேன். விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டுள்ள என் மகனுக்கு அரசு ஏதேனும் உதவிகளை செய்ய வேண்டும். மேலும் நான் வசிக்கும் குடிசை வீட்டிற்கு பதில் ஏதேனும் சிறிய வீடு கட்டி தர வேண்டும் என வேதனையுடன் தெரிவித்தார். பிறந்தது முதல் தற்போது வரை வெறும் பவுடர் பாலை மட்டுமே குடித்து உயிர் வாழும் கலையரசன் குறித்து பலருக்கு வியப்பாகவும், அதிசயமாகவும் இருந்தாலும் அவனது தற்போதோய நிலை கண்டு அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Related Stories:

>