×

கொள்ளையர்களால் தாய், மனைவி கொலை குடும்பத்திற்கு பாதுகாப்பு இல்லை : ராணுவ வீரர் கண்ணீர்

காளையார்கோவில் :  எனது குடும்பத்திற்கு பாதுகாப்பு இல்லை. விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்கு திரும்பவே அச்சமாக உள்ளது என, கொள்ளையர்களால் தாய், மனைவியை இழந்த ராணுவ வீரர் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே முடுக்கூரணி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்டீபன். இந்திய-சீன எல்லையான லடாக் பகுதியில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். ஜூலை 14ம் தேதி முடுக்கூரணி கிராமத்தில் வீட்டில் இருந்த இவரது தாய் ராஜகுமாரி, மனைவி சினேகா ஆகியோரை மர்மநபர்கள் கொலை செய்து 58 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர். குற்றவாளிகளை பிடிக்க காளையார்கோவில் காவல்துறை சார்பில் 5 தனிப்படை  அமைக்கப்பட்டது. சம்பவம் நடந்து 60 நாட்களை கடந்தும் இதுவரையில் குற்றவாளிகள் பிடிபடவில்லை.

இதுகுறித்து ராணுவ வீரர் ஸ்டீபன் கூறுகையில், ‘‘60 நாட்களை கடந்தும் குற்றவாளிகள் பிடிபடாதது காவல்துறை விசாரணையில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும், மீண்டும் எனது குடும்பத்தினரை மட்டுமே குறிவைத்து காவல்துறை விசாரணை மேற்கொள்வது வருத்தமளிக்கிறது. விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பவே அச்சமாக உள்ளது. உயிருடன் இருக்கும் எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலையே உள்ளது. என்னை பணியிட மாற்றம் செய்தால் தாய், மனைவி கொலை வழக்கு விசாரணையை கண்காணிக்க ஏதுவாக இருக்கும். காவல்துறை விரைந்து குற்றவாளிகளை பிடிக்க வேண்டும்’’ என்று கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்தார்.


Tags : robbers ,Army , Kalaiyarkoil, Army man, Cried, No Security for family
× RELATED ஷார்மி குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று