×

கட்டிட கழிவுகளை கொட்டி மூடப்படும் சிவகிரி வடகால்குளம்

*மனைகளாக மாறும் முன் பொதுப்பணித்துறை விழிக்குமா?

சிவகிரி : சிவகிரி வடகால்குளம் கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டு மூடப்பட்டு வருகிறது. இதனால் மனைகளாக மாறும் ஆபத்து நிலவுவதால், பொதுப்பணித்துறையினர் தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகிரி வடகால்குளம் பகுதியில் கட்டிடக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. கரைகள் துவங்கி குளத்தின் உள்பகுதிகள் வரை கட்டிட கழிவுகள், மண் கொட்டப்பட்டு உள்ளன. சிவகிரி அதன் சுற்றுப்பகுதிகளில் பழைய கட்டிடங்கள் இடிக்கப்படும் போது அக்கட்டிட கழிவு செங்கல், மண் உள்ளிட்டவைகளை வடகால்குளத்தில் கொண்டு வந்து கொட்டுகின்றனர்.

இதனால் குளத்தின் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படுவதுடன் போதுமான தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் மண் அள்ள அனுமதி அளிக்கப்பட்டு தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன. ஊரகப் பகுதிகளில் நீர்நிலைகள் மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டம் மூலம் சீரமைக்கப்படுகிறது. மேலும் நீர்நிலைகளில் எந்தவித கட்டிடங்களும் கட்டக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் பராமரிக்கப்பட வேண்டிய சிவகிரி வடகால்குளம் கட்டிட கழிவுகளால் மூடப்பட்டு மனைகளாக மாறிவிடுமோ என்ற அச்சம், மக்களிடையே ஏற்பட்டுள்ளது.  இதனை கருத்தில் கொண்டு பொதுப்பணித்துறையினர் சிவகிரி வடகால்குளத்தினை தூர்வாரி அப்பகுதியில் கட்டிட கழிவு பொருட்களையோ, இதர கழிவுகளையோ கொட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Tags : Sivagiri Vadakalkulam , Sivagiri, Building waste, vadakaalkulam, PWD
× RELATED தமிழ்நாட்டில் இரவு 7-மணி வரை 72.09 % வாக்குகள் பதிவாகி உள்ளன