×

செய்யாறு அருகே ஜடேரி கிராமத்தில் தயாராகிறது புரட்டாசி சனிக்கிழமையில் நெற்றியில் மிளிரும் நாமம்

செய்யாறு :  புரட்டாசி மாதத்தில் நெற்றியில் மிளிரும் நாமம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே ஜடேரி கிராமத்தில் தயாராகிறது. புரட்டாசி மாதம் நேற்று முன்தினம் பிறந்தது. புரட்டாசி மாதம் பிறந்தாலே ஒவ்வொரு சனிக்கிழமையும் வீடுகளில் பக்தி பரவசமாக ஒலிக்கும் முதல் குரல் நாராயணா, கோபாலா என்ற பக்தி முழக்கம் தான். அன்றைய தினம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் நெற்றியில் பளிச்சிடும் நாமம் தரித்து, கையில் சொம்புடன், இடுப்பில் வெள்ளை வேட்டி, அதற்கு மேல் மஞ்சள் துண்டு கட்டிக்கொண்டு வீட்டுக் கதவைத் தட்டாத பக்தர்கள் யாரும் இருக்க முடியாது.

புரட்டாசி மாதம் என்றாலே சனிக்கிழமைகளில் பெருமாள் வழிபாடு தான் நினைவிற்கு வரும். அப்போதே எந்த சனிக்கிழமையை கும்பிடுவது என்றும், உறவினர்களில் யார் யாரை கூப்பிடுவது என்று நிர்ணயித்த விழாவாக கொண்டாடுவார்கள். பெருமாள் கோயில்கள், பஜனை கோயில்களில் அன்றைய தினம் உறியடி போன்ற விழாக்களும் நடத்துவார்கள். பக்தி மயமான இந்த புராட்டாசி மாதத்தில் முதன்மை வகிப்பது நெற்றியில் அணியும் திருநாமம் தான்.
விஷ்ணு, பெருமாள், திருப்பதி வெங்கடாசலாபதி, கோவிந்தன், கிருஷ்ணண், ராமர் போன்ற வைஷ்ணவக் கடவுளை வணங்கும்போது நாமம் போட்டு இருப்பதை பழமையான புராணங்களில் இருந்து நாம் தெரிந்துக் கொள்ளலாம்.

அந்தக் காலத்தில் இருந்தே சிறப்பிடம் பெற்றிருக்கிறது நாமக்கட்டி. அந்த நாமக்கட்டி தயாரிப்பில் புகழ் பெற்று விளங்குவது ஜடேரி கிராமம் என்பது நம்மில் எத்தனை பேர்களுக்கு தெரியும். அப்படிப்பட்ட நாமம் எங்கிருந்து வருகிறது. அதன் பின்னணி பற்றி தெரிய வாய்ப்பில்லை. இந்த நாமத்தை நம்பி ஒரு கிராமமே உள்ளது என்றால் வியப்பாகத்தான் இருக்கும். நாமக்கட்டி என்றாலே நமக்கு ஞாபகத்திற்கு வருவது ஜடேரி கிராமம் தான்.  நாமக்கட்டிகளை உற்பத்தி செய்யும் இக்கிராமம் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே 7 கி.மீ தொலைவில் சுமங்கலி கிராமத்துக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது.

இக்கிராமத்தில் வாழும் சுமார் 150 குடும்பங்களில் 130 குடும்பத்தினர் நாமக்கட்டி செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கட்டி தயாரிப்பதற்காகவே இயற்கையே இந்த கிராமத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது ஒரு அதிசயமாகும். ஆம், நாமக்கட்டி தயாரிப்புக்கு முதல் ஆதாரமாக இருப்பவை வெள்ளை பாறைகள். இவை ஜடேரிக் கிராமத்தின் தாய் ஊரான தென்பூண்டிப்பட்டு கிராமத்தில் உள்ளன. இப்பகுதியில் ஆறரை அடி ஆழத்திற்கு தோண்டிச் சென்றால் வெள்ளை நிறத்திலான பாறைகள் நிறைய உள்ளன.

வெள்ளை நிறப் பாறைகள் சுமார் 15 அடி ஆழம் வரையில் காணப்படுகிறது. இந்த வெள்ளை நிறப்பாறைகளில் இருந்து நாமக்கட்டிகளை கிராம மக்கள் தயாரித்து வருகின்றனர். வெள்ளை நிறத்தில் காணப்படும் பாறைகளை வெட்டி எடுத்து, மாட்டு வண்டிகள் மூலம் ஜடேரி கிராமத்திற்கு எடுத்து வந்து பாறைகளை சிறு சிறு கட்டிகளாக உடைத்து  பின் அவற்றை அரவை இயந்திரங்களில் மாடுகளைப் பூட்டி வைத்து ஓட்டி நைசாக அரைக்கிறார்கள். இப்படி பாறைகளாக உள்ள வெள்ளை கற்களை நைசாக அரைத்து பின்னர் தண்ணீரில் சில மணி நேரம் ஊற வைக்கின்றனர். அப்போது, அந்த மண்ணின் மிருதுவான வண்டல் மண் மேலடுக்கு வந்து விடும். அதன் பின்னர் பள்ளத்தில் தேங்கி இருக்கும் தண்ணீரை வெளியேற்றி விட்டு அடியில் படிந்துள்ள மிருதுவான வெள்ளை  மண்ணை எடுத்து ஈரப்பதத்துடன் பெரிய, பெரிய மண் உருண்டைகளாக போட்டு வைக்கின்றனர்.

மண் உருண்டைகள் மிக லேசான ஈரப்பதத்தில் இருக்கும்போது சிறு, சிறு உருண்டைகளாக தட்டி நாமக்கட்டிகளாக உருட்டி வெயிலில் காய வைக்கின்றனர். பிறகு நாமக் கட்டிகள் நன்கு காய்ந்த பிறகு வைக்கோல் போட்டு மூட்டை, மூட்டைகளாக கட்டி விற்பனைக்கு வைக்கின்றனர்.  இவ்வாறு இங்கு தயாரிக்கப்படும் நாமக்கட்டி திருப்பதி, காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம் போன்ற கோயில்களிலும் சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களிலும் ஜடேரி நாமக்கட்டித்தான் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

ஜடேரி கிராமத்தில் உள்ளவர்கள் நான்கு, ஐந்து தலைமுறைக்கு மேலாக பரம்பரைத் தொழிலாக நாமக்கட்டிகளை செய்து வருகின்றனர்.  நாமக்கட்டி செய்யும் தொழில் தான் ஜடேரி கிராமத்தினருக்கு வாழ்வாதாரமாக உள்ளது. விவசாயம் இல்லாத காலங்களில் நாமக்கட்டி  தயாரிப்பில் ஈடுபடுகின்றனர்.

Tags : village ,Jaderi ,Seiyaru Purattasi , Seiyaru, perumal temples,Noun, Jaderi Village, tirupathi, Srirangam
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு...