×

சிற்றாறு தண்ணீர் குளங்களுக்கு வருவதில் சிக்கல் தீருமா? கங்கைகொண்டான் தடுப்பணை பணிகள் பாதியில் நிறுத்தம்

*10 ஆயிரம் ஏக்கரில் பாசன பரப்பு பாழாகிறது

நெல்லை : கங்கைகொண்டான் அருகே கரிசல்குளத்தில் சிற்றாறு தடுப்பணை கட்டும் பணிகள் கண்துடைப்புக்காக நடப்பதால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் பாசன பரப்பு பாழாகும் அவலம் காணப்படுகிறது. குற்றால அருவிகளில் பெருக்கெடுத்து கொட்டும் தண்ணீர், சிற்றாறு வழியாக தென்காசி, நெல்லை மாவட்டங்களில் உள்ள பல்வேறு குளங்களுக்கு பாய்ந்து பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை வளப்படுத்துகிறது. சிற்றாறு பாசனத்தில் மொத்தம் 17 தடுப்பணைகள் உள்ளன. தென்காசி அணைக்கட்டு தொடங்கி, உக்கிரன்கோட்டை, வாகைகுளம், கட்டாரங்குளம் என பல்வேறு இடங்களில் அணைக்கட்டுகளில் தண்ணீர் தேக்கப்பட்டு விளைநிலங்களுக்கு செல்கிறது. சிற்றாறு பாசனத்தின் கடைசி அணைக்கட்டாக கங்கை கொண்டான் கரிசல்குளம் அணைக்கட்டு உள்ளது.

கரிசல்குளம் அணைக்கட்டில் இருந்து வெளியேறும் தண்ணீர் கங்கைகொண்டான், 14ம் பேரி குளம், அலங்காரபேரிகுளம், குப்பக்குறிச்சி குளங்களை நிறைக்கிறது. அதிக மழைக்காலங்களில் மட்டுமே சிற்றாறு நீர் அனைத்து குளங்களையும் நிரப்பி இந்த பகுதி வரை பாய்ந்தோடுகிறது. மற்றபடி கங்கை கொண்டான் சுற்றுவட்டார விவசாயிகள் வானம் பார்த்த பூமியாகவே விவசாயம் செய்து வருகின்றனர். கங்கைகொண்டான் அருகே காணப்படும் சிற்றாறு தடுப்பணை மிகவும் பழுதான நிலையில் உள்ளது.

இதனால் அணைக்கு தண்ணீர் வந்தாலும் குளங்களுக்கு செல்வதில்லை. இந்த அணையை சீரமைக்கவும், கால்வாயை சரிசெய்யவும், பொதுப்பணித்துறை அவ்வப்போது நிதி ஒதுக்குவதும், பெயரளவுக்கு பணிகளை மேற்கொள்வதும் வாடிக்கையாகி வருகிறது. இவ்வாண்டிலும் தடுப்பணை பராமரிப்பு பணிகள் 4 மாதம் பணிகள் நடந்த நிலையில், திடீரென கிடப்பில் போடப்பட்டன. கான்கிரீட் கம்பிகள் கட்டிய நிலையில் அப்படியே போட்டுவிட்டு சென்றுவிட்டனர்.
இதுகுறித்து கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த விவசாயி முருகன் கூறுகையில், ‘‘கங்கைகொண்டான் சுற்றுவட்டார குளங்களை கடந்த 40 ஆண்டுகளாகவே பொதுப்பணித்துறையினர் புறக்கணித்து வருகின்றனர்.

எங்கள் பகுதி குளங்களுக்கு தண்ணீர் வர இதுவரை உரிய நடவடிக்கைகள் இல்லை. ஒவ்வொரு  முறையும் கால்வாய் செப்பனிடுதல் மற்றும் தடுப்பணை பராமரிப்பு பணிகளை தொடங்கி விட்டு அப்படியே விட்டு விட்டு செல்கின்றனர். இப்போதும் தடுப்பணை கால்வாயை அகலப்படுத்தவில்லை. தடுப்பணை சுவர்கள் பல இடங்களில் உடைந்து கிடப்பதை சீரமைக்க காங்கிரீட் சாய்தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டு இரும்பு கம்பிகள் கட்டப்பட்டது. ஆனால் அதன்பின் பணிகள் ஏதும் நடக்கவேயில்லை.

சீரமைப்பு பணிக்காக ஆற்றின் கரையில் கொட்டப்பட்ட கட்டுமானப் பொருட்கள் பாழாகி வருகின்றன. காங்கிரீட் பணிக்காக கலவை போடப்பட்ட பொருட்கள் இறுகி வீணாகிப் போனது. தண்ணீர் வழிந்தோடும் மடைகள் மண் மூடையாலும் தரமற்ற பொருட்களாலும் மூடப்பட்டுள்ளது. கால்வாயில் தண்ணீர் தடையின்றி செல்ல ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஆற்றை 50 மீட்டர் அளவு அகலப்படுத்த வேண்டும். ஆனால் 6 மீட்டர் அகலத்தில் கூட தண்ணீர் செல்ல வசதியில்லை.

கங்கைகொண்டானில் உள்ள ஒரு நிறுவனம் விவசாயிகளுக்கு உதவிட கால்வாயை சீரமைக்க முன்வந்தது. அதையும் பொதுப்பணித்துறை தடுத்து விட்டது. 1939ம் ஆண்டுக்கு பின்னர் கங்கைகொண்டான் கால்வாய் தூர்வாரப்படவில்லை. எங்கள் பகுதியில் உள்ள 4 குளங்களிலும் நீர் நிரம்பினால் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயனடையும்.


ஆனால் நீர் குளங்களுக்கு வருவதே இல்லை. கங்கைகொண்டான் குளமானது 1120 ஹெக்டேரில் பரந்து விரிந்து காணப்படுகிறது. அங்கு நீர் நிரம்பினால் இரு பூ விவசாயமும் சிறக்கும். கால்வாயில் மணல் திட்டுகள் அடைத்துள்ளன. எனவே தடுப்பணை மற்றும் கால்வாயை முறையாக சீரமைக்க பொதுப்பணித்துறை முன்வரவேண்டும்’’ என்றார்.

அடுத்த சில வாரங்களில் பருவமழை துவங்க வாய்ப்புள்ள நிலையில், தேவையான நிதி ஒதுக்கீடு செய்து அணையை முழுமையாக சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


அதிகாரிகள் சொல்வதென்ன?

இதுகுறித்து சிற்றாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘கங்கை கொண்டான் தடுப்பணை பணிகளை விரைந்து மேற்கொள்வதில் பொதுப்பணித்துறை ஆர்வமாக உள்ளது. கொரோனா பாதிப்புகள் காரணமாக பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. விரைவில் அணையை சீரமைத்து, கால்வாய் வழியாக குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்போம். இதற்கான பணிகள் அடுத்த வாரமே தொடங்கும்.’’ என்றனர்.

தெற்கு செழியநல்லூர் திட்டமும் அம்போ

சிற்றாறு பாசனத்தில் கங்கைகொண்டான் தடுப்பணைக்கு முன்பே தெற்கு செழியநல்லூர் தடுப்பணை காணப்படுகிறது. இங்கிருந்து தற்போது பிராஞ்சேரி, பருத்திக்குளம், பிழைபொறுத்தான்குளம் உள்ளிட்ட 6 குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது. இந்த தடுப்பணையில் இருந்து மணியாச்சி, பசுவந்தனை வரை 20 குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் 10 ஆண்டுகளுக்கு முன்பு தீட்டப்பட்டது. அத்திட்டமும் வெகுகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.


Tags : Gangaikonda , Tirunelveli, gangaikondan , karisalkulam, Sitraru
× RELATED ஜெயங்கொண்டம் அருகே கங்கை கொண்ட சோழபுரம் கோயில் நிலம் மீட்பு