×

வீடு இருக்கு... பணம் பட்டுவாடா செய்த ஆதாரம் இருக்கு... புதிதாக கட்டப்பட்ட கழிப்பறையைத்தான் காணோம்

*மயிலாடுதுறையில் மெகா மோசடி அம்பலம்

மயிலாடுதுறை : மயிலாடுதுறை ஒன்றியத்தில் கழிப்பறை கட்டும் திட்டத்தில் மெகா மோசடி அம்பலமாகி உள்ளது. கழிப்பறை கட்டியதாக லட்சக்கணக்கில் பணம் மோடி செய்யப்பட்டுள்ளது. கிசான், தொகுப்பு வீடு, ஆழ்துளை கிணறு என அடுத்தடுத்து அரசு திட்டங்களில் மெகா ஊழலில் அதிகாரிகள் ஈடுபட்டு கோடிக்கணக்கில் சுருட்டியது அம்பலமாகி உள்ள நிலையில், நாகை மாவட்டத்தில் கட்டாத வீடுகளுக்கு வாழ்த்து கடிதம் வந்து கொண்டிருப்பதால் அந்த மோசடியில் தொடர்புடைய அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர். இதைத்தொடர்ந்து மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் கழிப்பறை கட்டும் திட்டத்திலும் தற்போது முறைகேடு நடைபெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது.

மயிலாடுதுறை மணல்மேடு சாலையில் கொண்டல் பகுதியை சேர்ந்த கோதண்டராமன் மனைவி விஜயா. இவரது வீட்டிற்கு கழிப்பறை கட்டுவதற்கு ரூ.11,000 ஒதுக்கப்பட்டது. அவரது வேலைக்கான ஐ.டி. எண்.1612020, பணம் ஒதுக்கப்பட்ட தேதி 20.12.2013. ஆனால் விஜயா வீட்டிற்கு ஒரு பைசாகூட கிடைக்கவில்லை. இதுவரை கழிப்பறையும் கட்டப்படவில்லை. ஆனால் விஜயாவின் வீட்டிற்கு கழிப்பறை கட்டப்பட்டதாகவும், அதற்கான தொகை ரூ.11 ஆயிரத்தை அளித்து விட்டதாகவும் ரெக்கார்டு சரி செய்யப்பட்டுள்ளது.

இதே ஆண்டு வில்லியநல்லூர் கீழத்தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் கிருஷ்ணமூர்த்தி வீட்டிற்கும் ஐடி.எண்.1877778, ரூ.11 ஆயிரம் அளித்துள்ளதாகவும், அவரது வீட்டில் கழிப்பறை கட்டப்பட்டு விட்டதாகவும் ரெக்கார்டு கூறுகிறது. ஆனால் கிருஷ்ணமூர்த்திக்கு ஒரு ரூபாய்கூட கிடைக்கவில்லை. அதே போன்று பாலாகுடி முத்துக்குமரசாமி மகன் ஜெயராமன் ஐடி.1844896, ரூ.11 ஆயிரம் தொகை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை கழிப்பறை கட்டப்பட வில்லை.
வில்லியநல்லூர் உத்திராபதிகோயில் தெருவை சேர்ந்த ராமு மகன் பிரகாசம். இவருக்கு மாடிவீடு. ஆனால் இவரது பெயரிலும் ரூ.11 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது. இதே போல் பொன்னன் மகன் ராஜேந்திரன் உள்ளிட்ட 15 நபர்களுக்கு போலியாக பில் தயாரித்து ரூ.1.65 லட்சம் மட்டும் சுருட்டப்பட்டுள்ளது. வில்லியநல்லூரில் ஜெய்சிங்கம் மனைவி மலர்க்கொடி என்பவருக்கு 7.5.15ல் ஐடி.4145515, ரூ.12,000 தொகை எடுக்கப்பட்டுள்ளது.

பாரதபிரதமர் விவசாயிகள் நிதி உதவித்திட்டத்தில் நடைபெற்ற முறைகேட்டை தொடர்ந்து, உள்ளாட்சிகளில் வீடுகட்டுவதில் முறைகேடு வெளிவந்த நிலையில் தற்போது கழிப்பறை கட்டியதிலும் முறைகேடு வெளியாகியுள்ளது. நாகை மாவட்ட நிர்வாகம் இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தால் தான் பொதுமக்கள் பணத்தை கொள்ளையடிப்பது தடுக்கப்படும். இதில் ஏமாற்றப்பட்டவர்களுக்கு உடனடியாக கழிப்பறை கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : house , Mayiladuthurai, Toilet ,Mega fraud, Green Homes
× RELATED வீட்டை உடைத்து பணம், நகை திருட்டு