×

புதூர் வட்டார பகுதியிலுள்ள அங்கன்வாடி மையங்களுக்கு அழுகிய முட்டைகள் விநியோகம்

*மிரட்டும் அதிகாரியால் ஊழியர்கள் கலக்கம்

எட்டயபுரம் : தமிழகத்தில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படும் குழந்தைகள் அங்கன்வாடி மையங்களுக்கு வாரத்தில் திங்கள், புதன், வியாழன் ஆகிய மூன்று நாட்கள் முட்டைகள் வழங்கப்படுகிறது. அங்கன்வாடி மையங்களுக்கு ஒப்பந்தகாரர்கள் மூலம் வாரம் தோறும் முட்டைகள் குறிப்பிட்ட ஒரு மையத்தில் இருப்பு வைக்கப்படுகிறது. அங்கிருந்து மற்ற மையங்களுக்கு பணியாளர்கள் முட்டையை எடுத்துச் செல்கின்றனர். இவ்வாறு விநியோகம் செய்யும் முட்டைகளில் 20 சதவீதம் அழுகியும், உடைந்த நிலையிலும் காணப்படுகிறது. இதனால் அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு முட்டை வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.

இது குறித்து அங்கன்வாடி ஊழியர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தால் ஒப்பந்தக்காரர்களை ஒன்றும் சொல்ல முடியாத நிலையில் எங்களுக்கு ஒன்றும் தெரியாது என ஒதுங்கிக் கொள்கின்றனர். தற்போது கொரோனா பரவலை தடுக்கும் வகையில் விளாத்திகுளம் புதூர் வட்டாரத்தில் உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் முட்டை உள்ளிட்ட உணவு பொருட்களை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை குழந்தைகளின் வீடுகளுக்கு சென்று நேரடியாக வழங்குகின்றனர். இதனால் தற்போது பணியாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்கு 10 கிராம் பருப்பு, 80 கிராம் அரிசி அரசு ஒதுக்கியுள்ளது. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை குழந்தைகளின் வீடுகளுக்கு சென்று வழங்கும் போது வாரத்திற்கு நான்கு நாள் பருப்பு வீதம் இரண்டு வாரங்களுக்கு 80 கிராம் பருப்பும், ஒரு நாளைக்கு 80 கிராம் அரிசி வீதம் இரண்டு வாரத்திற்கு ஒரு கிலோ நூற்றி இருபது கிராம் அரிசியும் வழங்க வேண்டியுள்ளது. அதே போல் 6 முட்டைகளையும் மொத்தமாக வழங்க வேண்டியுள்ளது. இதனால் சரியான அளவில் வழங்க முடிவதில்லை இதனால் அங்கன்வாடி பணியாளர்கள் உணவுப் பொருட்களை மிகுந்த சிரமப்பட்டு வழங்கி வருகின்றனர்.

ஆனால் முட்டை வழங்குவதில் தான் சிக்கல் ஏற்படுகிறது. முட்டை அழுகிய நிலையில் இருப்பதாலும் உடைந்து காணப்படுவதாலும் அனைத்து குழந்தைகளுக்கும் வழங்க முடிவதில்லை. இதுகுறித்து அங்கன்வாடி பணியாளர்கள் கூறியதாவது:  புதூர் வட்டாரத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் பாதி அழுகிய நிலையில் முட்டை வந்தது. இதனால் அனைத்து குழந்தைகளுக்கும் முட்டை வழங்க முடியவில்லை, இது குறித்து வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலரிடம் கூறினால், ஒப்பந்தக்காரர்கள் நல்ல முட்டைகளை தான் வழங்குகிறார்கள், பணியாளர்கள் முட்டையை உடனே வழங்காமல் வைத்திருப்பதால் அழுகி விடுகிறது. அதற்கு நான் பொறுப்பல்ல, அனைத்து குழந்தைகளுக்கும் முட்டை வழங்க வேண்டும் என்றனர்.

இந்நிலையில் இந்த மாதம் புதூர் வட்டாரத்திற்கு வந்த 1,700 முட்டைகளும் அழுகிய நிலையில் வந்துள்ளது. இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலருக்கு பணியாளர்கள் தெரிவித்தனர். அதற்கு அவர் பணியாளர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் தெரிவித்த தகவலில், அங்கன்வாடி பணியாளர்கள், குழந்தைகளுக்கு அழுகிய முட்டை வழங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் என்றனர்.  அழுகிய முட்டை விநியோகம் விவகாரம் இப்பகுதியில் பூதாகரமாக கிளம்பியுள்ளது. எனினும் அழுகிப் போன முட்டைகளுக்கு மாற்று முட்டைகள் தரும்படி அங்கன்வாடி பணியாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபோன்ற அதிகாரிகளின் நிர்ப்பந்தங்களால் சொற்ப ஊதியம் பெறும் அங்கன்வாடி ஊழியர்கள் திகைக்கின்றனர்.

Tags : area ,Anganwadi Centers ,Puthur , Rotten eggs,Anganwadi Centers, Ettayapuram
× RELATED அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் மனு