புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீரங்கம் கோயிலில் 3,600 பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி

*மாநகர போலீஸ் கமிஷனர் தகவல்

திருச்சி : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடந்து வருகிறது. அதில் முக்கியமானது வைகுண்ட ஏகாதசி எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு ஆகும். இதில் இந்தாண்டு புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்து பெருமாளை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தற்போது ெகாரோனா பீதி நிலவுவதாலும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதாலும், புரட்டாசி மாதத்தில் வரும் பக்தர்களின் நலம் பேணும் வகையில் தரிசனத்திற்கு காத்திருக்காமல் புரட்டாசி சனிக்கிழமைகளில் மட்டும் கட்டணமில்லா சேவை மற்றும் கட்டண சேவை தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, www.srirangam.org என்ற இணையதள முகவரியில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுகுறித்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது போல் புரட்டாசி சனிக்கிழமைகளில் பொதுமக்கள் தரிசனத்திற்காக ஒவ்வொரு நேரத்திற்கும் 600 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி 6 நேர பிரிவுகளில் மொத்தம் 3,600 பேர் தரிசனத்திற்காக இணையதளம் மூலம் பதிவு செய்து தரிசனம் செய்ய இயலும்.

ஒவ்வொரு நேர பிரிலும் ரூ.250 கட்டண தரிசனத்திற்கு 200 டிக்கெட்டுகளும், ரூ.50 கட்டண தரிசனத்திற்கு 200 டிக்கெட்டுகளும், கட்டணமில்லாத தரிசனத்திற்கு 200 டிக்கெட்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இணையத்தில் பதிவு செய்து வரும் பக்தர்கள் அவர்களின் தரிசன நேரத்திற்கு அரை மணி நேரம் முன்னதாகவே வர வேண்டும். இவர்களின் இணையவழி டிக்கெட் அடையாள அட்டை சரிபார்த்த பின்னரே தரிசனத்திற்கு ரெங்கா ரெங்கா கோபுரம் வழியே அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

வாகன நிறுத்தங்கள்

முன்பதிவு அனுமதி சீட்டுடன் தரிசனத்திற்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து கார்களில் வரும் பக்தர்கள் சித்திரை வீதிகளில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்ல வேண்டும். சுற்றுலா பஸ்கள் மற்றும் வேன்களில் வரும் பக்தர்கள் வாகனங்களை மூலத்தோப்பு வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு தரிசனத்திற்கு செல்ல வேண்டும். உத்திர வீதிகளில் வாகனங்கள் செல்லவும், நிறுத்தவும் அனுமதி கிடையாது.

Related Stories:

>