×

தனியார் நிறுவனங்களே ரயில் கட்டணத்தை முடிவு செய்யலாம்: மத்திய அரசு அனுமதி

புதுடெல்லி: ‘ரயில்களை இயக்கும் தனியார் நிறுவனங்களே பயணிகள் டிக்கெட் கட்டணத்தை தன்னிச்சையாக நிர்ணயித்துக் கொள்ளலாம்,’ என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  ரயில்வே சேவையில் தனியார் துறையை ஊக்குவிக்கும் வகையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டில் ரயில்வே கட்டணங்கள் அரசியல்ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒவ்வொரு நாளும் பல கோடி மக்கள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். ஏழை மக்கள் பெரும்பாலும் தங்கள் போக்குவரத்துக்கு ரயில்களையே சார்ந்துள்ளனர். பல ஆண்டுகளாக ரயில்வே துறையானது அலட்சியம் மற்றும் திறமையற்ற நிர்வாகத்தால் சூழப்பட்டு இருந்தது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசானது ரயில் நிலையங்களை நவீனமயமாக்குதல், ரயில்களை இயக்குதல் என அனைத்திலும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்பதற்கு அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த ஜூலையில் 109 வழித்தடங்களில் 151 பயணிகள் ரயில்களை இயக்குவது தொடர்பாக தனியார் நிறுவனங்கள் தங்களது விருப்பம் குறித்து அறிக்கையை சமர்பிக்கும்படி கேட்டுக் கொண்டு இருந்தது. மேலும் டெல்லி, மும்பை ரயில் நிலையங்களை நவீனமயமாக்குவது குறித்தும் தனியார் நிறுவனங்களை அரசு கேட்டிருந்தது. இந்நிலையில், ரயில்வே வாரிய தலைவர் விகே யாதவ் கூறுகையில், “தனியார் நிறுவனங்கள் நாட்டில் ரயில் சேவையை இயக்கத் தொடங்கியவுடன், பயணிகள் கட்டணத்தை  நிர்ணயிப்பதற்கு அரசு அனுமதிக்கப்படும். அதே நேரத்தில் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் மற்றும் விமானங்களும் அந்த வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. எனவே, கட்டணங்களை நிர்ணயிக்கும் முன் இதனை தனியார் நிறுவனங்கள் மனதில் கொள்ள வேண்டும்,” என்றார்.



Tags : companies , Private companies can decide train fares: Federal approval
× RELATED மருந்து நிறுவனங்களிடமும் பாஜக அதிக நன்கொடை..!!