தொடக்க லீக் ஆட்டத்தில் இன்று ரோகித் சர்காருடன் தோனி தர்பார் மோதல்: தெறிக்க விடப்போவது யார்?

அபுதாபி: ஐபிஎல் டி20 தொடரின் 13வது சீசன், ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன், கடந்த ஆண்டு 2வது இடத்தைப் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகிறது. கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலால் இம்முறை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ள ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் என மொத்தம் 8 அணிகள் களமிறங்குகின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற 7 அணிகளுடன் தலா 2 முறை லீக் ஆட்டங்களில் மோதுகின்றன. லீக் சுற்று நவம்பர் 3ம் தேதியுடன் நிறைவடைகிறது. புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றில் விளையாடும். இறுதிப் போட்டி நவம்பர் 10ம் தேதி நடைபெற உள்ளது. அபுதாபியில் இன்று இரவு 7.30க்கு தொடங்கும் முதல் லீக் ஆட்டத்தில் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சின் சவாலை எதிர்கொள்கிறது. கடந்த சீசனின் இறுதிப் போட்டியில் மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி 4வது முறையாக கோப்பையை முத்தமிட்டது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளும் இன்று மீண்டும் பலப்பரீட்சை நடத்த இருப்பது கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலை வெகுவாகத் தூண்டியுள்ளது. மும்பை அணியில் கேப்டன் ரோகித், ஹர்திக் பாண்டியா, குருணல் பாண்டியா, டி காக், போலார்டு ஆகியோரது அதிரடி ஆட்டமும், ஜஸ்பிரித் பூம்ராவின் வேகமும் சூப்பர் கிங்சுக்கு நெருக்கடி கொடுக்கலாம்.

சென்னை அணியின் கேப்டன் தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு களமிறங்கும் முதல் தொடர் இது என்பதால் அவரது அதிரடி ஆட்டத்தை மீண்டும் காண கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஷேன் வாட்சன், ஜடேஜா, எம்.விஜய், டு பிளெஸ்ஸி, டுவைன் பிராவோ என்று சிஎஸ்கே அணியிலும் அதிரடிக்கு பஞ்சமில்லை. சென்னை அணியில் இருந்து ரெய்னா, ஹர்பஜன் மற்றும் மும்பை அணியில் இருந்து மலிங்கா சொந்த காரணங்களுக்காக விலகியுள்ளது இரு அணிகளுக்குமே சற்று பின்னடைவை கொடுத்துள்ளது. எனினும், தொடக்க போட்டியில் வெற்றியை வசப்படுத்த மும்பையும் சென்னையும் வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி. ஸ்டேடியத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்பதுடன், வீரர்களும் தங்களுக்குள் கை குலுக்கவோ, கட்டித் தழுவிப் பாராட்டவோ கூடாது, பந்தை பளபளப்பாக்க எச்சில் மற்றும் வியர்வையை உபயோக்கிக்கக் கூடாது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்:  எம்.எஸ்.தோனி (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ஷேன் வாட்சன், பாப் டு பிளெஸ்ஸி, லுங்கி என்ஜிடி, டுவைன் பிரோவா, இம்ரான் தாஹிர், முரளி விஜய் (தமிழ்நாடு), தீபக் சாஹர், ரவீந்திர ஜடேஜா, கே.எம்.ஆசிப், ஜோஷ் ஹேசல்வுட், கரண் சர்மா, நாரயணன் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர், தமிழ்நாடு), அம்பாதி ராயுடு, கேதார் ஜாதவ், பியுஷ் சாவ்லா, மிட்செல் சான்ட்னர், ஷர்துல் தாகூர், சாய் கிஷோர் (தமிழ்நாடு), ருதுராஜ் கெய்க்வாட், மோனு குமார், சாம் கரன். விலகிய வீரர்கள்: சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங்.

மும்பை இந்தியன்ஸ்: ரோகித் ஷர்மா (கேப்டன்), ஷெர்பேன் ரூதர்போர்டு, சூரியகுமார் யாதவ், அன்மோல்பிரீத் சிங், கிறிஸ் லின், சவுரவ் திவாரி, தவால் குல்கர்னி, ஜஸ்பிரித் பும்ரா, மிட்செல் மெக்லநாகன், ராகுல் சாஹர், டிரென்ட் போல்ட், மோசின் கான், பிரின்ஸ் பல்வந்த்ராய் சிங், திக்விஜய் தேஷ்முக், ஹர்திக் பாண்டியா, ஜெயந்த் யாதவ், கைரன் பொலார்டு, குருணல் பாண்டியா, அனுகுல் ராய், நாதன் கோல்டர் நைல், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ஆதித்ய தாரே (விக்கெட் கீப்பர்). விலகல்: லசித் மலிங்கா.

* அதிக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் வார்னர் (44), ரெய்னா (38), தவான் (37), கோஹ்லி (36), ரோகித் (36), கம்பீர் (36) முன்னிலை வகிக்கின்றனர்.

* அதிக சதம் விளாசியவர்களில் கிறிஸ் கேல் (6), கோஹ்லி (5), வார்னர் (4), வாட்சன் (4), டி வில்லியர்ஸ் (3) முதல் 5 இடங்களை பிடித்துள்ளனர்.

* அதிவேக சதம் விளாசிய சாதனை கிறிஸ் கேல் (30 பந்து) வசமுள்ளது. யூசுப் பதான் (37 பந்து), டேவிட் மில்லர் (38 பந்து), ஆடம் கில்கிறிஸ்ட் (42 பந்து), டி வில்லியர்ஸ் (43 பந்து) அடுத்த இடங்களில் உள்ளனர்.

* அதிவேக அரை சதம் அடித்தவர்களில் லோகேஷ் ராகுல் (14பந்து), யூசுப் பதான் (15 பந்து), சுனில் நரைன் (15பந்து), ரெய்னா (16 பந்து), கிறிஸ் கேல் (17 பந்து) முன்னிலை வகிக்கின்றனர்.

* ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியவர் என்ற பெருமை சிஎஸ்கே வீரர் லட்சுமிபதி பாலாஜி வசமுள்ளது. இதுவரை 19 முறை ஹாட்ரிக் சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அதில் அமித் மிஸ்ரா 3 முறையும், யுவராஜ் சிங் 2முறையும் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளனர்.

நேருக்கு நேர்...

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை மும்பை-சென்னை அணிகள் 28முறை  நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் மும்பை அணி 17 வெற்றியும், சென்னை 11 வெற்றியும் பெற்றுள்ளன. ஐபிஎல் இறுதிப் போட்டியில் இந்த 2 அணிகளும் 3முறை களம் கண்டன. அதில் 2முறை மும்பையும், ஒருமுறை சென்னையும் வென்றுள்ளன. அதேபோல் லீக் சுற்றுகளின் முதல் போட்டியில் மும்பை 6 முறையும்,  சென்னை 4 முறையும்  வென்றுள்ளன. இந்த 2 அணிகளும் கடைசியாக மோதிய 5 போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணியே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>