×

குறைந்த வட்டியில் வங்கி கடன் வழங்குவதாக பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி: பெண்கள் உள்ளிட்ட 5 பேர் கைது

துரைப்பாக்கம்: பெருங்குடி கல்லுக்குட்டையை சேர்ந்தவர் கருப்பையா. கடந்த ஏப்ரல் மாதல் 8ம் தேதி இவரை செல்போனில் அழைத்த இளம்பெண், டாடா கேபிடல் நிறுவனத்தில் இருந்து பேசுகிறேன். குறைந்த வட்டியில் ₹2 லட்சம் கடன் வழங்குகிறோம், என கூறியுள்ளார்.  ஊரடங்கால் பொருளாதார சிக்கலில் தவித்த கருப்பையா, கடன் பெற சம்மதித்தார். உடனே கடன் பெறுவதற்கான படிவத்தை, வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளார். அதன் மூலம் ஆதார், டெபிட், பான் கார்டு, வங்கி கணக்கில் உள்ள இருப்பு ஆகிய விவரங்களை பெற்றுள்ளார்.  பின்னர், கடன் தொகையை வங்கி கணக்கில் அனுப்புவதற்கு உங்கள் செல்போனில் வரும் ரகசிய குறியீட்டு எண்ணை தெரிவிக்கும்படி கூறியுள்ளார். இதை நம்பிய கருப்பையா, ரகசிய குறியீட்டு எண்ணை தெரிவித்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அவரது வங்கி கணக்கில் இருந்த அனைத்து பணமும் எடுக்கப்பட்டதாக அவரது செல்போனுக்கு எஸ்எம்எஸ் வந்துள்ளது.

அப்போது தான் அவர் ஏமார்ந்தது தெரிந்தது. இதுகுறித்து அடையாறு துணை கமிஷனர் விக்ரமனிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக, சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கருப்பையாவை தொடர்பு கொண்ட செல்போன் எண் போலி சான்று அளித்து வாங்கப்பட்டதும், அந்த எண் நாமக்கல் குமாரப்பாளையத்தில் பயன்படுத்துவதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் குமாரப்பாளையம் சென்று அப்பகுதியில் விசாரணை நடத்தினர். இதில், ஈரோடு மாவட்டம், கருங்காளிபாளையத்தை சேர்ந்த குமரேசன் (28) என்பவர், குமாரபாளையத்தை சேர்ந்த விவேகானந்தன் (41), காயத்திரி (20), ரஞ்சிதா (25), சுபத்ரா (21) ஆகியோரை வைத்து போலியாக கால் சென்டர் நடத்தி, மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.

இங்கு பணிபுரியும் பெண்கள், பலரை செல்போனில் தொடர்புகொண்டு, குறைந்த வட்டியில் வங்கி கடன் தருவதாக ஆசை வார்த்தை கூறி, நூதன முறையில் அவர்களின் வங்கிக் கணக்கில் உள்ள அனைத்து பணத்தையும் அபேஸ் செய்தது தெரியவந்தது.  அதன்படி, 30க்கும் மேற்பட்டவர்களிடம் பல லட்சம் ரூபாயை மோசடி செய்ததும் தெரியவந்தது. மேலும், கடந்த 2016ம் ஆண்டு, ஸ்ரீராம் பைனாஸ் நிறுவத்தின் பெயரில் மோசடி செய்த வழக்கில், இவர் சிறை சென்றதும், வேலூர் காவல் நிலையத்தில் வங்கி மோசடி தொடர்பாக வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து, 9 பட்டன் செல்போன்கள், 3 தொலைபேசி, லேப்டாப், ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.



Tags : millions ,women , Fraud of millions over low-interest bank loans: 5 arrested, including women
× RELATED உலகம் முழுவதும் ரமலான் நோன்பு தொடக்கம்